மாணவ, மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் பொருட்டும், பாதுகாப்பான சூழ்நிலையில் கல்வி கற்பதை உறுதி செய்யும் வகையில் பள்ளி மற்றும் கல்லுாரி முதல்வர்கள், தலைமையாசிரியர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
செ.வெ.எண்:-02/2024
நாள்:-02.09.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாணவ, மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் பொருட்டும், பாதுகாப்பான சூழ்நிலையில் கல்வி கற்பதை உறுதி செய்யும் வகையில் பள்ளி மற்றும் கல்லுாரி முதல்வர்கள், தலைமையாசிரியர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாணவ, மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் பொருட்டும், பாதுகாப்பான சூழ்நிலையில் கல்வி கற்பதை உறுதி செய்யும் வகையில் பள்ளி மற்றும் கல்லுாரி முதல்வர்கள், தலைமையாசிரியர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(02.09.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
மாணவ, மாணவிகள் தான் இந்தியாவின் நாளைய எதிர்காலம். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாதுகாப்பான முறையில், அமைதியான சூழ்நிலையில் கல்வி பயில்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுப்பது நமது அனைவருடைய கடமை, பொறுப்பு ஆகும்.
மாணவ, மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். மனம் ஹெல்ப் லைன், பெண்கள் ஹெல்ப்லைன், 181 போன்றவற்றின் வாயிலாக நல்ல, தீய தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். போக்சோ சட்டம் குறித்து விளக்கம் அளித்திட வேண்டும்.
மாணவ, மாணவிகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது நடத்திட வேண்டும். ஆண், பெண் என அனைவருக்கும பாதுகாப்பு அளித்தல், கல்வி கற்க பாதுகாப்பான சூழ்நிலைகளை உறுதி செய்தல் வேண்டும்.
பள்ளி, கல்லுாரி அருகில் போதைப்பொருட்கள் விற்பனையை கண்டறிந்து, அவற்றை தடுத்திட வேண்டும். போதை பழக்கத்தில் சிக்கிய மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு முறையான ஆலோசனைகள் வழங்க வேண்டும். அதற்காக மனநல ஆலோசகர்கள் உள்ளனர். அவர்கள் மூலமாகவும் ஆலோசனைகள் வழங்க ஏற்பாடுகள் செய்திட வேண்டும். ஒருமுறை ஆலோசனை வழங்குவதுடன் நிறுத்திவிடாமல், தொடர்ந்து மாதத்திற்கு ஒருமுறை சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, அவர்கள் தவறான வழிக்கு செல்லாமல் தடுத்திட வேண்டும்.
ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மாதம்தோறும் கூட்டம் நடத்துதல் வேண்டும். புகார்கள் ஏதேனும் வரப்பெற்றால் பதிவு செய்து, நடவடிக்கை எடுத்திட வேண்டும். புகார் அளிக்கும் நபர்கள் குறித்த விவரங்களை ரகசியமாக பாதுகாத்தல் வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் அருகில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். கேமரா பதிவுகளின் சேமிப்பு திறனை 25 நாட்கள் வரை இருக்கும் வகையில் அமைத்திட வேண்டும். கலை நிகழ்ச்சிகள் நடக்கும் இடம், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., முகாம்கள் நடைபெறும் இடங்களை கண்காணித்தல் வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைக்கு, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறுப்பு அலுவலர்களை நியமித்திட வேண்டும். அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பெற்றோர்களுடன் இணைந்து செயல்பட்டு மாணவ, மாணவிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். அரசு அனுமதியுடன், அங்கீகரிக்கபட்ட நிகழ்சிகளில் மட்டுமே பங்கேற்க மாணவ, மாணவிகளை அனுமதிக்க வேண்டும்.
ஏதேனும் தவறுகள் நடப்பது கண்டறியப்பட்டாலோ, மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு குறைபாடு சூழ்நிலை ஏற்பட்டாலோ உடனடியாக நேரிடையான காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். இதுதொடர்பாக புகார்கள் 9498410581 வாட்ஸ் அப், கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 வாயிலாக தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். தவறு செய்தால் தண்டனை என்பதை உருவாக்கிட வேண்டும். குற்றம் இல்லாத நிலையினை ஏற்படுத்திட வேண்டும்.
மாணவ, மாணவிகள், பாதுகாப்புடன் கல்வி பயிலுவதற்கான சூழ்நிலையை உருவாக்கிட அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றிட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, முதன்மைக் கல்வி அலுவலர் திரு.இரா.புண்ணியகோடி, பள்ளி, கல்லுாரி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.