மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் 1572 குழுக்களைச் சேர்ந்த 18,223 மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு ரூ.123.54 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடன் இணைப்பு வழங்கினார்கள்.
செ.வெ.எண்:-18/2024
நாள்:-09.09.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் 1572 குழுக்களைச் சேர்ந்த 18,223 மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு ரூ.123.54 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடன் இணைப்பு வழங்கினார்கள்.
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இன்று(09.09.2024) மதுரையில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக தமிழகம் முழுவதும் மகளிர் சுயஉதவி குழுவினர்களுக்கு ரூ.2,735 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன் ஆகியோர் முன்னிலையில் திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கி கடனுக்கான ஆணைகளை வழங்கினர்.
இவ்விழாவில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது:-
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், ஆட்சிகாலத்தில் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், தமிழக மக்களின் மேம்பாட்டிற்காகவும் பல்வேறு முத்தான திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அந்த வகையில், பெண்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும். தனது குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் பொருளாதார நிலையில் மேம்பாடு அடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தொடங்கப்பட்டுதுதான் மகளிர் சுயஉதவிக்குழுக்கள். தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு, இப்போது சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இத்திட்டத்தின் பிதாமகனாக கலைஞர் அவர்களை நான் வணங்குகிறேன்.
அந்தவகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு அதிகளவில் கடனுதவிகள் வழங்கி பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்தார். சிறுவணிகக் கடனுதவி, தொழில் கடனுதவி என பெண்கள் முன்னேற்றத்திற்காக குறைந்த வட்டியில் கடனுதவிகள் வழங்கி, கந்துவட்டிக் காரர்களிடம் கையேந்தி நின்ற நிலையை மாற்றி அமைத்துள்ளார்.
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழகம் முழுவதும் மகளிர் சுயஉதவி குழுவினர்களுக்கு ரூ.2,735 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கும் பணியை மதுரையில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று(09.09.2024) தொடங்கி வைத்துள்ளார்கள்.
பெண்களை மகளிர் சுய உதவிக்குழுவில் இணைத்து அவர்களின் ஆற்றலை மேம்படுத்துவதோடு வாழ்வாதார மேம்பாட்டிற்கான கடன் உதவிகளையும் பெற்றுக்கொடுத்து வருமானத்தை ஈட்டுவதற்கான வழிவகைகளை இந்த அரசு ஏற்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 10,050 குழுக்களும், நகர்ப்புற பகுதிகளில் 3,964 குழுக்களும் என ஆக மொத்தம் 14,014 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வங்கி கடன் இணைப்பாக கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் 18,876 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூபாய் 992.20 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் நிதியாண்டில் 14,779 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூபாய் 828.60 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டிற்கு 14,021 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூபாய் 921.00 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2024-25-ஆம் ஆண்டிற்கு ரூபாய் 1,023 கோடி வங்கி கடன் இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு, இதுவரை 3,953 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 280.12 கோடி வங்கி கடனாக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய விழாவில்(09.09.2024) திண்டுக்கல் மாவட்டத்தில் 1572 குழுக்களைச் சேர்ந்த 18,223 மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு ரூ.123.54 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்படுகின்றன.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழகம் முழுவதும் 24 இலட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்கள் வீடுகளில் தொலைக்காட்சியை கண்டுகளிக்க வேண்டும் என்பதற்காக 2 கோடி குடும்பங்களுக்கு இலவச வண்ணத்தொலைக்காட்சி வழங்கப்பட்டது.
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஒரு இலட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளன. தமிழகத்தில் வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஒரு குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை, குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000, கல்லுாரி படிக்கும் மகன், மகள் இருந்தால் அவர்களுக்கும் மாதந்தோறும் தலா ரூ.1000, பெண்கள் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் திட்டத்தின் மூலம் ஒவ்பொரு குடும்பத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தொகை மாதந்தோறும் சேமிப்பாகிறது… இப்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.10,000 வரை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகிறார்கள்.
தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அடிப்படையில் பெண்களை நோக்கியே உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மக்களுக்கான மக்கள் அரசு, எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் சிறப்பாக தொடரவும், இந்த அரசின் நலத்திட்டங்கள் தொடரவும் பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக பதவி வகித்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காகவும் மகளிர் சுயஉதவிக்குழுவை தொடங்கினார். இதன்மூலம் பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட வழிவகை ஏற்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் பெண்களின் முன்னேற்றத்தை நோக்கியே அரசின் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், குடும்பத் தலைவிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் பெண்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இதன்மூலம் தமிழகம் முழுவதும் 1.16 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர். மேலும் தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம், தினமும் பணிக்கு செல்லும் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் 20.70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.
பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
கூட்டுறவுத்துறையில் மகளிர் சுயஉதவிக்குழுவினரின் கடன்கள் மற்றும் 5 பவுனுக்கு குறைவான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கூட்டுறவு கடன் தொகை ரூ.12.00 இலட்சத்திலிருந்து ரூ.30.00 இலட்சம் வரை உயர்த்தி வழங்கப்படுகிறது.
தமிழக மக்களின் மேம்பாட்டிற்காக இதுபோன்ற பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, என்றென்றும் உறுதுணையாக, ஆதரவுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இவ்விழாவில், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திரு.மு.பாஸ்கரன், மாநகராட்சி துணை மேயர் திரு.ச.ராஜப்பா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சதீஸ்பாபு, உதவி திட்ட அலுவலர்கள் திரு.வெற்றிச்செல்வம், திரு.ராம்குமார், திருமதி ஜீவரம்யா, திருமதி பிரியங்கா, திரு.அருண்குமார், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திரு.ப.க.சிவருகுசாமி, ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் திருமதி த.ராஜேஸ்வரி தமிழ்ச்செல்வன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி சுப்புலட்சுமி சண்முகம், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி சுமதி கணேசன், ஊராட்சி மன்ற தலைவர் திரு.வேல்மணி, அரசு அலுவலர்கள், உதவித்திட்ட அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.