மூடு

நிறைந்தது மனம் எனும் திட்டத்தின் கீழ் ”நான் முதல்வன் திட்டத்தில்” பயனடைந்த மாணவ, மாணவியர்களை சந்தித்து, இத்திட்டத்தின் வாயிலாக 45,255 மாணவ, மாணவியர்கள் பயன்பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்

வெளியிடப்பட்ட தேதி : 16/09/2024
.

செ.வெ.எண்:-40/2024

நாள்:-14.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

நிறைந்தது மனம் எனும் திட்டத்தின் கீழ் ”நான் முதல்வன் திட்டத்தில்” பயனடைந்த மாணவ, மாணவியர்களை சந்தித்து, இத்திட்டத்தின் வாயிலாக 45,255 மாணவ, மாணவியர்கள் பயன்பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நான் முதல்வன் திட்டத்தின்கீழ் உயர்வுக்குபடி என்னும் சிறப்பு திட்டத்தின் வாயிலாக உயர்கல்வி பயில்வதற்கு வாய்ப்பினை பெற்ற கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சேர்க்கை விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவ, மாணவியர்கள் உயர் கல்வி பயில்வதற்கான வழிகாட்டிடவும், திறன் மேம்பட்ட மாணவர்களை உருவாக்கிடவும் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரித்திடவும், நான் முதல்வன் என்னும் சிறப்புத்திட்டத்தினை ஏற்படுத்தி 2022-23ஆம் கல்வியாண்டில் 1,15,000 மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கிட உத்திரவிட்டார்கள்.

அதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 2022-23ஆம் கல்வியாண்டில் 2,580 பெறியியல் கல்லூரி மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இத்திட்டம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டதன் அடிப்படையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 7,849 மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. 2022-23-ஆம் கல்வியாண்டில் மொத்தம் 10,429 மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டது.

2023-24ஆம் கல்வியாண்டில் 5,932 பொறியில் கல்லூரி மாணவர்களுக்கும் 14,846 கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும், 954 தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கும், 1,630 தொழிற்பயிற்சி மாணவர்கள் என மொத்தம் 23,362 மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டது.

2024-25ஆம் கல்வியாண்டில் தற்பொழுது வரை 1,633 பொறியில் கல்லுரி மாணவர்களுக்கும் 6,833 கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும், 1,598 தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கும் 452 தொழிற்பயிற்சி மாணவர்கள் என மொத்தம் 10,516 மாணவர்கள் திறன் பயிற்சி வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 44,307 மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற உயர் கல்வியில் சேராதவர்கள், தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியில் சேருவதற்காக நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கடந்த 2022-23 மற்றும் 2023-24-ஆம் ஆண்டுகளில் “உயர்வுக்குப்படி” என்ற முகாம் துவக்கப்பட்டது. 2022-23 ஆம் கல்வியாண்டில் அனைத்து வட்டாரங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு அதன் வாயிலாக உயர் கல்வி பயிலாத 811 மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரியில் சேர்ந்து கட்டணமின்றி கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது 2023-24ஆம் கல்வியாண்டில் தற்போது நடைபெற்ற 2 சிறப்பு முகாம்களின் மூலம் 137 மாணவர்கள் உயர் கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 948 மாணவ, மாணவியர்கள் உயர் கல்வி பயின்று வருகின்றனர்.

கொடைக்கானலில் நடைபெற்ற சிறப்பு முகாமின் மூலம் தற்போது 4 நபர்கள் கல்வி பயில்வதற்கான சேர்க்கை விண்ணப்பம் வழங்கப்பட்டது. இதுபோன்ற அரசின் திட்டங்களை பயன்படுத்தி மாணவ, மாணவியர்கள் தங்களது வாழ்வினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

உயர்வுக்குபடி திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மாணவர் தெரிவிக்கையில்:-

என் பெயர் விக்ரம். நான் பூம்பாறையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றேன். எனது குடும்ப பொருளாதார பிரச்சனையால் மேல் படிப்பு படிக்க முடியாமல் தோட்ட வேலை செய்தேன். நேற்று கொடைக்கானலில் நடந்த நான் முதல்வன் திட்டத்தில் கலந்து கொண்டேன். அங்கே நான் மேல் படிப்பு படிக்க வாய்ப்பு கொடுத்தாங்க. இதன் மூலம் கல்லூரியில் உயர்கல்வி பயில வேண்டும் என்ற எனது லட்சிய கனவு நிறைவேற வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு நன்றி என்னை போல் பிற மாணவர்களும் நான் முதல்வன் திட்டத்தில் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

என் பெயர் விஜயராஜன் நான் பூம்பாறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டியிருந்தேன். 12-ஆம் வகுப்பு முடித்த பின்பு பொருளாதார பிரச்சனையின் காரணத்தினால் உயர்கல்வி பயிலாமல் 18 மாதங்கள் வீட்டிலிருந்து பிற வேலைகளை சேய்து வந்தேன். உயர் கல்வி பயல வேண்டும் என்ற விருப்பம் இருந்தும் சூழ்நிலையின் காரணமாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. தற்போது கொடைக்கானலில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தில் எனது ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி நான் கலந்து கொண்டேன். இதன் மூலம் கல்லூரியில் கட்டணமின்றி உயர் கல்வி பயில்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதனால் என்னை போன்ற ஏழை எளிய மாணவர்களுக்கும் உயர்கல்வி என்பது சாத்தியமாகியுள்ளது. தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற சிறப்பு திட்டங்களை அனைத்து மாணவ, மாணவியர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.