மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை மேலாண்மைக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
செ.வெ.எண்:-65/2024
நாள்:25.09.2024
திண்டுக்கல் மாவட்டம்
மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை மேலாண்மைக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை(DFFDA) மேலாண்மைக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(25.09.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் தரமான மீன்கள் மற்றும் மீன் உணவுகளை நியாயமான விலையில், சுகாதாரமான முறையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்திடவும், தரமான மீன் புரதச்சத்து உணவினை மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று சேர்த்திட ஏதுவாக திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி மற்றும் நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் 4 நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள் திண்டுக்கல் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை வாயிலாக மொத்தம் ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது. தற்போது 4 நடமாடும் மீன் விற்பனை வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
மீனவர்களுக்கான கிசான் கடன் அட்டை வழங்கிட ஏதுவாக வங்கிகள் மூலம் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. விவசாயிகள் தங்கள் நிலங்களிலுள்ள பண்ணைக்குட்டைகளில் மீன்குஞ்சு இருப்பு செய்து மீன்வளப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வரும் பருவமழைக்குள் மீன்வளர்ப்பிற்கு தகுதியான நீர்நிலைகளை பயன்படுத்திட வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து துறை நீர்நிலைகளிலும் மீன்வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில் 2024-25 ஆம் ஆண்டிலிருந்து உரிய காலத்தில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் மற்றும் ஐந்தாண்டுகளுக்கு குத்தகைக்கு விட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மீன் வளத்துறை உதவி இயக்குனர் திரு.ஜனார்த்தனன், மீன்வளத்துறை ஆய்வாளர்கள் திருமதி இந்துசாரா, திருமதி ஞானசுந்தரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.