மூடு

மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்ட உறுதிமொழிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

வெளியிடப்பட்ட தேதி : 30/09/2024
.

செ.வெ.எண்:-68/2024

நாள்:-27.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்ட உறுதிமொழிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழுவினர்(2024-2025), குழுத்தலைவர்(பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர்) திரு.தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்ட உறுதிமொழிகள் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(27.09.2024) மாவட்ட உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு(2024-2025) உறுப்பினர்கள் சோழிங்கநல்லுார் சட்டமன்ற உறுப்பினர் திரு. ச.அரவிந்த்ரமேஷ், சேலம்(மேற்கு) சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.அருள், திருப்பத்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.நல்லதம்பி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. சா.மாங்குடி, அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.கே.மோகன், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஜெயக்குமார், சட்டமன்றப் பேரவை இணைச் செயலாளர் திரு.மு.கருணாநிதி, சார்புச் செயலாளர் திருமதி த.பியூலஜா மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு என்பது, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கின்ற உறுதிமொழிகள், அதன் செயல்பாடுகள் குறித்து, சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் அறிக்கை சட்டமன்ற பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் மொத்தம் 306. அதில் பேரவைக்கு அறிக்கையில் அளிக்கப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் 51. அதில் 23 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 3 உறுதிமொழிகள் படித்து பதிவு செய்யப்பட்டன. 25 உறுதிமொழிகள் நிலுவையில் உள்ளன. தற்போது, சட்டமன்ற பேரவைக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் 255. அதில் 128 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டன. 29 உறுதிமொழிகள் படித்து பதிவு செய்யப்பட்டன. 98 உறுதிமொழிகள் நிலுவையில் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 60 சதவீதம் வரை உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன,

இவ்வாய்வின்போது அரசு உறுதிமொழி குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பதில்களின் அடிப்படையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு நிறைவடைந்த பணிகள் குறித்த பதிலை பெற்று, நிலுவையில் இருந்த மனுக்கள் முடித்து வைக்கப்பட்டன. மேலும் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் நிலை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அப்பணிகளை விரைவாக முடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழு, கடந்த ஆண்டு 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆண்டும் இந்தக்குழுவின் தலைவராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். அதையடுத்து கடந்த ஆண்டு ஆய்வு மேற்கொள்ள இயலாத மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த ஆண்டு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள 2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு வருகை தந்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்ட உறுதிமொழிகள், கோரிக்கை மனுக்களில் திண்டுக்கல் மாவட்டம் சார்ந்த உறுதிமொழிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று குழு உறுப்பினர்களுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அன்னதான மண்டபத்தில் சமையலறை, அன்னதானம் தயாரிப்பு பணிகள், அன்னதானம் கூடம் ஆகிய இடங்களை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருக்கோயிலில் சுமார் ரூ.50.00 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பக்தர்களுக்கான வசதிகள், அன்னதானம் தரம் குறித்து பக்தர்களிடம் கேட்டறியப்பட்டது. பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி, இன்னும் எளிதாக சுவாமி தரிசனம் மேற்கொள்ள பக்தர்கள் அளித்த கோரிக்கைகள், தரிசன வரிசை, பாதுகாப்பு, ரோப்கார் வசதி, பக்தர்கள் தங்கும் மண்டபம் அமைத்தல் உட்பட திருக்கோயில் தொடர்பான 32 உறுதிமொழிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முடிக்கப்பட்ட பணிகள் குறித்து திருக்கோயில் இணை ஆணையர் மற்றும் அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடம் ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒட்டன்சத்திரத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிட்டங்கியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, ரெட்டியார்சத்திரத்தில் இந்தியா-இஸ்ரேல் கூட்டு தொழில்நுட்பத்தில் செயல்பட்டு வரும் காய்கறி மகத்துவ மையத்தில் காய்கறிகள், நாற்றுகள் உற்பத்தி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, என மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதிமொழிக்குழு தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதிஜோதிபிரகாஷ், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திரு.மு.பாஸ்கரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன், மாவட்ட வன அலுவலர்கள் திண்டுக்கல் திரு.பு.மு.ராஜ்குமார், இ.வ.ப., கொடைக்கானல் திரு.யோகேஸ்குமார் மீனா, இ.வ.ப., திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல், பழனி வருவாய் கோட்டம் சார் ஆட்சியர் திரு.சீ.கிஷன்குமார், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.