பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து இல்லங்கள் மற்றும் விடுதிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட இணையத்தளம் அல்லது அலுவலகம் வாயிலாக ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
செ.வெ.எண்:-74/2024
நாள்:29.10.2024
திண்டுக்கல் மாவட்டம்
பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து இல்லங்கள் மற்றும் விடுதிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட இணையத்தளம் அல்லது அலுவலகம் வாயிலாக ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், போதைபொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மனநலம் பாதிக்கபட்டோருக்கான இல்லங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இத்தகைய இல்லங்கள் அனைத்தும் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான சட்டங்களின்படி, பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும்.
அவ்வாறு பதிவு பெறாமல் செயல்படும் குழந்தைகள், பெண்கள், முதியோர், இல்லங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவை உரிய முறையில் இணையத்தளம் அல்லது சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பதிவு செய்திட விண்ணப்பிக்க ஒரு மாதம் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விடுதிகள் மற்றும் இல்லங்கள் வகைப்பாடு, சம்பந்தப்பட்ட துறை, பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான சட்டப்பிரிவு, விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் மற்றும் அலுவலகங்கள் விபரம் வருமாறு:-
குழந்தைகள் இல்லங்களை பொறுத்தவரை குழந்தைகள் நலன் (ம) சிறப்புச் சேவைகள் துறை சம்பந்தப்பட்டவை ஆகும். இவை இளைஞர் (நீதி பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015-ன் படி பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு பதிவு பெறாமல் இருந்தால் https://dsdcpimms.tn.gov.in (அல்லது) மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்திட வேண்டும்.
முதியோர் இல்லங்களை பொறுத்தவரை சமூக நலத்துறை சம்பந்தப்பட்டவை ஆகும். இவை மூத்த குடிமக்களுக்கான சட்டம், 2007-ன் படி பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு பதிவு பெறாமல் இருந்தால் www.seniorcitizenhomes.tnsocialwelfare.tn.gov.in (அல்லது) மாவட்ட சமூக நல அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்திட வேண்டும்.
மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள் ஆகியவற்றை பொறுத்தவரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சம்பந்தப்பட்டவை ஆகும். இவை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-ன் படி பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு பதிவு பெறாமல் இருந்தால் https://scd.tn.gov.in/ – and navigate to “Thiran Platform” (அல்லது) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்திட வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகளை பொறுத்தவரை சமூக நலத்துறை சம்பந்தப்பட்டவை ஆகும். இவை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களுக்கான (ஒழுங்கு முறை) சட்டம், 2014-ன் படி பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு பதிவு பெறாமல் இருந்தால் https://tnswp.com (அல்லது) மாவட்ட சமூக நல அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்திட வேண்டும்.
போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகியவற்றை பொறுத்தவரை தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் (State Mental Health Authority) சம்பந்தப்பட்டவை ஆகும். இவை மனநல பாதுகாப்புச் சட்டம், 2017-ன் படி பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு பதிவு பெறாமல் இருந்தால் https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php (அல்லது) முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில நல ஆணையம், அரசு மன நல காப்பகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 அவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று, விண்ணப்பித்திட வேண்டும்.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து இல்லங்கள் மற்றும் விடுதிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட இணையத்தளம் (Portal) அல்லது அலுவலகம் வாயிலாக ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்க தவறும்பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட இல்லங்களுக்கு சீல் வைக்கப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.