மூடு

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் ரூ.1.08 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

வெளியிடப்பட்ட தேதி : 25/11/2024
.

செ.வெ.எண்:-50/2024

நாள்:-21.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் ரூ.1.08 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், முத்தனம்பட்டி, மாங்கரை, டி.புதுப்பட்டி, டி.பண்ணைப்பட்டி மற்றும் பண்ணைப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ரூ.1.08 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று(21.11.2024) திறந்து வைத்து, முத்தனம்பட்டியில் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாக்களில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்திலும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இன்று(21.11.2024) காலை பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் மூலம் ரூ.1.80 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன. மேலும், ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, தற்போது ரெட்யார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், முத்தனம்பட்டி ஊராட்சியில் ரூ.12.67 இலட்சம் மதிப்பீட்டிலும், மாங்கரை ஊராட்சி, நெட்டியப்பட்டியில் ரூ.9.32 இலட்சம் மற்றும் நடுப்பட்டியில் ரூ.12.32 இலட்சம் மதிப்பீட்டிலும், பண்ணைப்பட்டி ஊராட்சியில் ரூ.9.32 இலட்சம் மதிப்பீட்டிலும், டி.பண்ணைப்பட்டி ஊராட்சி தெத்துப்பட்டியில் ரூ.9.32 இலட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை கட்டடங்கள், டி.புதுப்பட்டி ஊராட்சியில் கனிமம் 2023-24 வள நிதி ரூ.13.53 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை, நமக்குநாமே திட்டத்தில் டி.பண்ணைப்பட்டி ஊராட்சி தெத்துப்பட்டி மற்றும் பண்ணைப்பட்டி ஊராட்சியில் ஆதிதிராவிடர் காலனி, பழைய ஆதிதிராவிடர் காலனி ஆகிய இடங்களில் தலா ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடங்கள் என இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மொத்தம் ரூ.1.08 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் முத்தனம்பட்டியில் பொதுசுகாதார வளாகம் ரூ.7.80 இலட்சம் மதிப்பீட்டிலும், சிமென்ட் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் ரூ.7.20 இலட்சம மதிப்பீட்டிலும் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

ஆகமொத்தம் இன்றையதினம் மட்டும் பல்வேறு பகுதிகளில் ரூ.2.89 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ.95.00 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது

பொதுமக்களின் கோரிக்கைகள் மீது தனிக்கவனம் செலுத்தி, அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் பொதுமக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திரு.ப.க.சிவகுருசாமி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் திருமதி ராஜேஸ்வரி தமிழ்செல்வன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.