மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் விரிவாக்கத்தை தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்கள்.
செ.வெ.எண்:-73/2024
நாள்:-30.12.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் விரிவாக்கத்தை தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்கள்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பழனி சின்னக்கலையம்புத்தூர் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் புதுமைப்பெண் திட்ட பயனாளிகளுக்கு பற்று அட்டைகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(30.12.2024) மூவாலுார் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் புதுமைப்பெண் திட்டத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் விரிவாக்கத்தை தூத்துக்குடியில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள மாணவிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணை இயக்குநர் திருமதி கு.கண்மணி ஆகியோர் முன்னிலையில் பழனி சின்னக்கலையம்புத்தூர் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் புதுமைப்பெண் திட்ட பயனாளிகளுக்கு பற்று அட்டைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021-ஆம் ஆண்டில் ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக மகளிர் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறார்கள்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆகியோர் கண்ட கனவு பெண்கள் முன்னேற வேண்டும். பெண்கள் சமுதாயத்தில் தன்னிறவு பெற வேண்டும். அதனால் தான் தந்தை பெரியார் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, உள்ளாட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென விரும்பினார். அவர்களுடைய கனவை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் 1989-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த சமயத்தில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொண்டு வந்தார். 2006-ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் 33 சதவிகித இடஒதுக்கீடு கொண்டு வந்தார்.
அதற்கு பின்பு உள்ளாட்சியில் உள்ளாட்சி மன்றத் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், நகராட்சி தலைவர்கள், மாநகராட்சி மேயர், மாவட்ட ஊராட்சி தலைவர்கள் என பல்வேறு தற்போது பெண்களுக்கு 50 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 1996-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் 10-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு சென்றால் பேருந்தில் கட்டணமில்லா சலுகை வழங்கப்படும் என அறிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காக பெண்கள் சுய உதவிக்குழுக்களை துவங்கப்பட்டு, அவர்களின் முன்னேற்றத்திற்காக சுழல் நிதி, பொருளாதார நிதி, மானிய நிதி என பல்வேறு நிதிகளை வழங்கினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் தொகுதியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் கல்லூரியும் ரெட்டியார்சத்திரத்தில் உயர்கல்வித்துறையின் சார்பில் கல்லூரியும், களைஞ்சியத்தில் உயர்கல்வித்துறையின் சார்பில் கல்லூரியும், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் சார்பில் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இதுபோல் பெண்கள் முன்னேற்றத்திற்கும், கல்வி வளர்ச்சிக்கும் தமிழ்நாடு அரசு ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கின்ற பெண்கள் அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்கு சென்றார் ரூ.1000 வழங்கும் திட்டத்தை 05.09.2022 ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வடசென்னை பாரதி மகளிர் கல்லூரில் முதன்முதலில் தொடங்கப்பட்டது.இத்திட்டம். வறுமை காரணமாக உயர்கல்வியில் சேர இயலாத மகளிர்க்கு உயர்கல்வி வாய்ப்பை தருவதோடு. பெற்றோரின் பொருளாதாரச் சுமையை குறைக்கிறது. இளம் வயது திருமணங்களையும் தடுக்கிறது. மாணவியர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கிறது. இத்திட்டத்தின் பயனாக, மாணவியர்கள் அதிகளவில் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் மூலம் அரசு உதவி பெறும் பள்ளியில் 5604 பயனடைந்து வருகிறார்கள்.
புதுமைப்பெண் திட்டத்தினை தொடர்ந்து மாணவர்களின் சேர்க்கை விகிதத்தினை அதிகரிக்கும் பொருட்டு தமிழ்ப்புதல்வன் என்னும் திட்டம் மாண்புமிகு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 09.08.2024 அன்று துவக்க விழா நடைபெற்றது. தமிழ்புதல்வன் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்பொழுது 6921 மாணவர்கள் பயன் பெறுகின்றனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தூத்துக்குடியில் 30.12.2024 அன்று நடைபெறும் விழாவில் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கப் பணிகளைத் தொடங்கி வைத்தார்
திண்டுக்கல் மாவட்டத்தில் 10 பொறியியல் கல்லூரிகள், 22 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 1 மருத்துவக்கல்லூரி மற்றும் 10 நர்சிங் கல்லூரிகள், 8 தொழிற்பயிற்சி நிலையங்கள், 10 பாலிடெக்னிக் கல்லூரிகள், ஒரு சட்டக்கல்லூரி, ஒரு ஆசிரியர் பயிற்சி நிலையம், ஒரு பல்கலைக்கழகம், 8 பார்மஸி மற்றும் 3 வேளாண்மை கல்லூரிகள் உட்பட 75 கல்லூரிகளில் 3681 மாணவிகள் பயன்பெற தகுதியான நிலையில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 9255 மாணவியர்கள், 6921 மாணவர்கள் என மொத்தம் 16,276 பயன்பெற்று வருகிறார்கள்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சிகாலத்தில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் அரசு பேருந்துகளில் இலவச பயணம் திட்டத்தை செயல்படுத்தினார். அந்த வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இந்த திட்டங்களை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், பழனி சார் ஆட்சியர் திரு.எஸ்.கிஷன்குமார், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் திரு.அருணாச்சலம், மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, பழனி, சின்னக்கலையம்புத்தூர் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் ந.புவனேஸ்வரி, ஒன்றிய பெருந்தலைவர் திருமதி ஈஸ்வரி, ஒன்றிய செயலாளர்(மேற்கு) திரு.சௌந்திரபாண்டியன், நகர்மன்ற துணைத்தலைவர் திரு.கந்தசாமி கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.