மூடு

மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோதங்கராஜ் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு, 93 பயனாளிகளுக்கு ரூ.4.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 12/06/2025
.

செ.வெ.எண்:-26/2025

நாள்:-10.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோதங்கராஜ் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு, 93 பயனாளிகளுக்கு ரூ.4.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோதங்கராஜ் அவர்கள் இன்று(10.06.2025) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட்., மற்றும் பால் வளத்துறை ஒருங்கிணைந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, 93 பயனாளிகளுக்கு ரூ.4.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

ஆய்வுக்கூட்டத்தில், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட்., வாயிலாக விற்பனை செய்யப்படும் பால் அளவு குறித்தும், மாவட்டத்தில் செயல்படும் பால் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களிடமிருந்து பெறப்படும் பால் கொள்முதல் செய்யப்படும் அளவு, தயாரிக்கப்படும் பால் பொருட்கள் வகைகளின் எண்ணிக்கை மற்றும் அளவுகள், பால் குளிரூட்டும் மையங்களின் எண்ணிக்கை, பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிடமிருந்து பால் கொள்முதல் செய்து பால்பண்ணை மற்றும் மொத்த குளிரூட்டும் மையங்கள் ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக செயல்படும் பால் சேகரிப்பு வழித்தடங்களின் விவரம், நுகர்வோர்களுக்கு பால் விநியோகம் செய்ய ஏதுவாக பால் பாக்கெட்களை விற்பனைக்கு கொண்டு செல்ல பயன்படும் வழித்தடங்களின் விவரம் குறித்து விரிவாக கேட்டறிந்தார். மேலும், பால் உற்பத்தியை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் பகுப்பாய்வு கருவிகள், கணினி மற்றும் அச்சு இயந்திரங்கள், பசுந்தீவன விதைகள், 3 லிட்டர் திரவ நைட்ரஜன் குடுவை, கறவை மாட்டுக்கடன், கால்நடை பராமரிப்புக் கடன், உற்பத்தியுடன் இணைந்த ஆதரவளிக்கும் ஊக்கத்தொகை என மொத்தம் 93 பயனாளிகளுக்கு ரூ.4.17 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விவசாயம் மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பால் வளத்துறையானது பல இலட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரதை தீர்மானிக்கும் துறையாக உள்ளது.

பேரறிஞர் அண்ணாத்துரை அவர்கள், ஏழையின் சிரிப்பில் இறைவணைக் காணலாம் என்றார்கள். அந்த வகையில், ஏழைகளில் வாழ்வாதாரத்தை உயர்த்தி, அடுத்தக்கட்டத்திற்கு அவர்களை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆவின் நிறுவனமானது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பொதுத்துறை நிறுவனமாகும். தமிழ்நாட்டில் ஆவின் மூலம் தினமும் 36 லட்சம் லிட்டர் பால் கையாளப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பல்வேறு நடவடிகைகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. ஆவின் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பலனாக வருங்காலங்களில் 45 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பால் மற்றும் பால் பொருட்களின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே, பால் பயன்பாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆவின் மூலம் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதர பாலினை கொண்டு பால் உப பொருட்களான பன்னீர், பால்கோவா, தயிர், நெய் என சுமார் 200க்கும் மேற்பட்ட இதர பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3.00 உயர்த்தி வழங்கப்பட்டது. அதன்பின்னர் உற்பத்தியுடன் இணைந்த ஆதரவளிக்கும் ஊக்கத்தொகை, கூடுதல் பால் உற்பத்திக்கான ஊக்கத்தொகை, தரத்திற்கேற்ப விலை உயர்வு என இதுவரை லிட்டருக்கு ரூ.10.00 வரை கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனங்களில் செலவை குறைக்க மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக மின் கட்டணம் 15 சதவீதம் குறைக்கப்பட்டு ரூ.52.00 இலட்சம் சேமிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களையும் லாபத்தை நோக்கி செயல்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக, திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமானது 181 கூட்டுறவு சங்கங்கள் மூலம் தினமும் 95 இலட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகப்படியான கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளிலும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் துவங்குவதற்கும், அதிகப்படியான கால்நடை வளர்ப்போர்களை உறுப்பினர்களாக சேர்த்து பால் கொள்முதல் செய்திடவும், விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கிடவும், நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் இன்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாநில அளவில் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், ஆவின் கொள்முதல் திறனை கையாளவும், விவசாயிகளுக்கு தரமான கறவை மாடுகள் வழங்கவும் தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, என மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோதங்கராஜ் அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக, மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோதங்கராஜ் அவர்கள், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பால் பொருட்கள் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்கள் என்பதால் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்வதுடன், இயந்திரங்களை அவ்வப்பொழுது தூய்மையாக பராமரித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்தஆய்வில், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன் அவர்கள், வணக்கத்திற்குரிய திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ் அவர்கள், உதவி ஆட்சியர்(பயிற்சி) மரு.ச.விநோதினி பார்த்திபன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் திரு.ச.ராஜப்பா அவர்கள், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திருமதி சுபாஷிணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.கோட்டைகுமார், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் பொது மேலாளர் மரு.க.வாணீஸ்வரி, துணைப்பதிவாளர்(பால் வளம்) திரு.அ.இரணியன், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.

.

.