மூடு

மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் ஆட்சியர் அலுவலக பகுதியில் சாலையோரங்களில் அமர்ந்து மனுக்கள் எழுதித் தரும் நபர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரடியாக சந்தித்து, அவர்கள் அருகில் தரையில் அமர்ந்து, அவர்களின் தேவைகளையும், மனுக்களின் உள்ளடக்கத்தையும் கேட்டறிந்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 24/06/2025
.

செ.வெ.எண்:-84/2025

நாள்:-23.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் ஆட்சியர் அலுவலக பகுதியில் சாலையோரங்களில் அமர்ந்து மனுக்கள் எழுதித் தரும் நபர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரடியாக சந்தித்து, அவர்கள் அருகில் தரையில் அமர்ந்து, அவர்களின் தேவைகளையும், மனுக்களின் உள்ளடக்கத்தையும் கேட்டறிந்தார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் ஆட்சியர் அலுவலக பகுதியில் சாலையோரங்களில் அமர்ந்து மனுக்கள் எழுதித் தரும் நபர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(23.06.2025) நேரடியாக சந்தித்து, அவர்கள் அருகில் தரையில் அமர்ந்து, அவர்களின் தேவைகளையும், மனுக்களின் உள்ளடக்கத்தையும் கேட்டறிந்தார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாரமும் இந்த குறைதீர் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அறித்து வருகின்றனர்.

மனு அளிக்க வரும் பொதுமக்கள் மற்றும் எழுதப்படிக்கத் தெரியாதவர்களக்கு உதவிடும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் சிலர் ஆங்காங்கே அமர்ந்து மனுக்கள் எழுதிக் கொடுத்து வருகின்றனர். அதற்காக மனுதாரர்கள் கொடுக்கும் சிறிய தொகை பெற்றுக்கொண்டு மனுக்கள் எழுதிக்கொடுக்கும் பணியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் மனு எழுதிக்கொடுத்து அதில் கிடைக்கும் வருமானத்தைதான் தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், திங்கட்கிழமையான இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வந்தபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பிரதான வாயில் முன்பு, மனுக்கள் எழுதித் தரும் நபர்கள் தரையில் அமர்ந்து பணியாற்றும் இடத்திற்குச் சென்றார். அங்கு, தரையில் அமர்ந்த அவர், மனுக்கள் எழுத வந்திருந்த பொதுமக்களிடமும், மனுக்கள் எழுதித் தரும் நபர்களிடமும் பேசினார். பொதுமக்கள் எந்தெந்தப் பிரச்சனைகளுக்காக மனுக்களை அளிக்க வந்துள்ளனர், அவர்களுக்கு என்ன மாதிரியான உதவிகள் தேவை என்பது குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஏராளமானோர் மனுக்கள் அளித்து வருகின்றனர். அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதி, பாலம் அருகில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து மனுக்கள் எழுதிக் கொடுக்கின்றனர். அதற்காக சிறிய தொகையை பெற்றுக்கொள்கின்றனர். இந்த தொழிலையே அவர்கள் வாழ்வாதாரமாக பயன்படுத்தி வருகின்றனர். முதியவர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் என பலர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் எழுதிக்கொடுக்கும், இந்த மனு எழுதுபவர்களுக்கு ஏதாவது கோரிக்கைகள் உள்ளனவா, அவர்கள் சந்திக்கும் சிரமங்கள் என்ன, அவர்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைந்துள்ளதா என்பது குறித்து இன்று அவர்களிடம் நேரடியாக கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. மனு எழுதிக்கொடுக்கும் ஒருவரின் இரண்டு மகள்கள் கல்லுாரிகளில் படித்து வருகின்றனர். அவர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 கிடைத்து வருகிறது.

மேலும், மனு எழுதிக்கொடுப்பவர்கள், சாலை ஓரங்கள், பாலத்தின் கீழ் பகுதிகளில் அமர்ந்துள்ளனர். இதனால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்கள் மனு எழுதிக்கொடுப்பதற்கு பாதுகாப்பான இடம் ஏற்படுத்திக் கொடுக்க வசதி வாய்ப்புகள் உள்ளனவா, தன்னார்வலர்கள் மூலம் கட்டணமின்றி மனு எழுதிக்கொடுக்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கலாமா என்பது குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இதுகுறித்து மனு எழுதிக்கொடுக்கும் நபர்கள் தெரிவித்ததாவது:-

மாவட்ட கலெக்டர் அவர்கள் எங்களுடன் தரையில் அமர்ந்து எங்கள் குறைகளைக் கேட்டறிந்தது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. இது எங்களுக்குக் கிடைத்த பெரிய மரியாதை. நாங்கள் சந்திக்கும் சிரமங்கள் என்னென்ன என்பது குறித்து அவர் பொறுமையுடன் கேட்டறிந்தார். கலெக்டர் அவர்களின் இந்த செயல், மனுதாரர்ளுடன் நெருங்கிப் பழகி, அவர்களின் பிரச்சனைகளை நேரடியாக உணர்ந்து தீர்வு காண வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது, என தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின், இந்த எளிமையான திடீர் அணுகுமுறை, அங்கிருந்த அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.