திண்டுக்கல் பூட்டு இரும்பு பொருட்கள் மற்றும் அறைகலன்கள் தொழிலாளர்கள் தொழிற்கூட்டுறவு சங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
செ.வெ.எண்:-104/2025
நாள்:-26.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் பூட்டு இரும்பு பொருட்கள் மற்றும் அறைகலன்கள் தொழிலாளர்கள் தொழிற்கூட்டுறவு சங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் பூட்டு இரும்பு பொருட்கள் மற்றும் அறைகலன்கள் தொழிலாளர்கள் தொழிற்கூட்டுறவு சங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பூட்டு தயாரிப்பு முறைகளை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் பூட்டு இரும்பு பொருட்கள் மற்றும் அறைகலன்கள் தொழிலாளர்கள் தொழிற்கூட்டுறவு சங்கம் 1957-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நல்ல தரமான பூட்டுகள் செய்து வரும் ஒரு முன்னோடி தொழிற்கூட்டுறவு நிறுவனம். தமிழ்நாடு அரசின் தொழில் வணிகத்துறையின் திண்டுக்கல் மாவட்ட தொழில் மையம் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்தச் சங்கம், தமிழ்நாட்டிலேயே தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்த தொழிற்கூட்டுறவு சங்கம், அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே போன்ற அனைத்து நிறுவனங்களுக்கும் தரமான பூட்டுக்களை விநியோகித்து தமிழ்நாடு அரசு மற்றும் பிற வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்று நல்ல லாபகரமான முறையில் இயங்கி வருகிறது. இச்சங்கம் மூலம் 75 எம் எம் பேட்லாக் 7 லீவர்ஸ் (இரும்பு மற்றும் பித்தளை), 63 எம் எம் பேட்லாக் 6 லீவர்ஸ், 70 எம்எம் காவலன் 8 லீவர்ஸ், 55 எம் எம் காவலன் 7 லீவர்ஸ், 55 எம் எம் சென்டினல் 7 லீவர்ஸ், லண்டன் பூட்டுக்கள், ரயில்வே பூட்டுக்கள் தனித்துவம் மிக்கவை, கதவு பூட்டுக்கள் (டோர் லாக்) என பல்வேறு வகையான பூட்டுகள் தயாரித்து சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்ற இப்பூட்டுகள் தற்போது இணையதள வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது.
தொழிற்கூட்டுறவுத் துறையில் பூட்டு உற்பத்தி செய்யும் பாரம்பரிய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்துடன் பூட்டு உற்பத்தி செய்ய தேவையான அனைத்து அடிப்படை இயந்திரங்கள், தளவாடங்கள், பணிமனை ஏற்படுத்தித் தந்துள்ளதோடு, உயர்நிலையில் நவீன இயந்திரங்களுடன் பூட்டு உற்பத்தி செய்யும் கோத்ரெஜ் நிறுவனம் மற்றும் கீழ்நிலையில் குறைந்த விலையில் பூட்டுக்களை வழங்கும் அலிகார் நிறுவனங்கள் ஆகியவை விடுக்கும் தொழில் ரீதியான மற்றும் விற்பனை ரீதியான அறைகூவல்களை எதிர்கொண்டு வெற்றி பெற்று ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது.
திண்டுக்கல் பூட்டிற்கென ஒரு பெயரும், புராதணமும் மாற்றப்படாத அமைப்பும் உள்ளது. எனவே, இதனை, முழு இயந்திரமாக்கலில் பராமரிக்கப்பட்டு வந்த கைவினைஞர்களின் திறன் மங்கச் செய்யக்கூடாது என்ற கருத்துரைகளை ஏற்றும் கைவினைஞர்களின் பணியின் முழுமையாக மாற்றாத ஓரளவு நவீன மயமாக்கல் திட்டத்திற்கு தயார் செய்யப்பட்டு வருகிறது.
சொந்த நிதி ஆதாரத்துடன் செயல்பட்டு, தரமான பூட்டுகளை தயாரித்து வரும் இச்சங்கத்திற்கு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பூட்டுக்களுக்கு இச்சங்கத்தை “திண்டுக்கல் பூட்டு இரும்பு பொருட்கள் மற்றும் அறைகலன்கள் தொழிலாளர்கள் தொழிற்கூட்டுறவு சங்கம் லிட்., இண்ட் எண்.150, 17-ஏ, சௌந்திரராஜா மில்ஸ் ரோடு, திண்டுக்கல் -624003“ என்ற முகவரியில் நேரிலோ அல்லது கைப்பேசி எண் 9629808072, 9500490503 வாயிலாகவோ தொடர்புகொண்டு பயன்பெறலாம். இதன்மூலம் இச்சங்கம் மேலும் சிறப்பாக செயல்பட்டு உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட ஏதுவாக அமையும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, உதவி இயக்குநர்(தொழிற்கூட்டுறவு சங்கம்) திருமதி எல்.எஸ்.கவிதா, உதவி இயக்குநர்(பொருளாதார புலனாய்வு) திரு.எஸ்.நாகராஜன், தொழிற்கூட்டுறவு அலுவலர் திருமதி ஏ.எம்.ஜெயசக்தி, தொழிற்கூட்டுறவு மேற்பார்வையாளர் திருமதி எஸ்.டி.சுதா மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.