மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆத்தூரில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
செ.வெ.எண்:-78/2025
நாள்: 23.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆத்தூரில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று(23.07.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும், கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்றடையச் செய்யும் வகையில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அந்தவகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமை தொடங்கி வைத்துள்ளார்கள். கோரிக்கை மனுக்கள் அளிப்பதற்காக பொதுமக்கள் யாரையும் தேடிச் சென்று அலைய வேண்டியது இல்லை. உங்கள் கிராமங்களில் நடத்தப்படும் முகாம்களில் மனுக்கள் அளிக்க வேண்டும். இத்திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு மட்டுமின்றி சொல்லாத பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் சுமார் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். தகுதியுள்ள பெண்கள் விடுபட்டிருந்தால் அவர்களும் இத்திட்டத்தில் பயனடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
“உங்களுடன் ஸ்டாலின்“ திட்டம் சிறப்பு முகாம் திண்டுக்கல் மாவட்டத்தில் 360 இடங்களில் நடைபெறவுள்ளது.. திண்டுக்கல் மாவட்டத்தில் 4 இலட்சம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. விடுபட்ட தகுதி உள்ளவர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்பட்டு வருவாதால் தமிழகத்தில் அனைவருக்கும் குடியிருக்க வீடுகள் என்ற நிலை உருவாகி உள்ளது. மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைப்பது மட்டுமின்றி முதியோர் உதவி தொகை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிடைக்க இந்த முகாமில் மனு கொடுத்தால் போதும். விரைவில் தகுதியுள்ள நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வீடு தேடி வரும். இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது, என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், ஆத்தூர் வட்டாட்சியர் திரு.முத்துமுருகன், சமூக பாதுகாப்பு திட்ட ஆட்சியர் தனுஷ்கோடி, ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், மண்டல துணை வட்டாட்சியர் பிரவீனா, ஆத்தூர் ஒன்றிய அலுவலக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாராஜன்(தணிக்கை) வட்டார வளர்ச்சி அலுவலர் கி.ஊ.தட்சிணாமூர்த்தி, துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.