மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
செ.வெ.எண்:-51/2025
நாள்: 13.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம்
ஊராட்சி ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சியில் இன்று (13.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தி வருகிறார். பொதுமக்களுக்கு தேவையான கல்வி, குடிநீர் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றிட பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைகோடி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் சென்றடையும் வகையில் ஜாதி, மதம் வேறுபாடு இன்றி செயல்படுத்தி வருகிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமை தொடங்கி வைத்துள்ளார்கள். இம்முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, தெரு விளக்கு வசதி, குளத்தை தூர்வாரும் பணிகள், வாய்க்கால் உருவாக்குதல் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இம்முகாமில் நீங்கள் மகளிர் உரிமைத்தொகை வேண்டி மனுக்கள் வழங்கி இருந்தால் அம்மனுவின் மீது உடனடி தீர்வு காணப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும்.
60 வயது கடந்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, எனவே, முதியோர் உதவித்தொகை இதுவரை பெறாதவர்கள் இம்முகாமில் மனு கொடுத்தால் அந்த மனுவின்மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு, முதியோர் உதவித்தொகை வழங்க வழிவகை செய்யப்படும்.
அரசு பள்ளியில் படித்து கல்லூரி மேல் படிப்பிற்கு சென்றால் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் மற்றும் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்களின் கீழ் சுமார் 18 இலட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் உடல்நிலை சரியில்லை என்றால் சிகிச்சை மேற்கொள்ள ரூ.5.00 இலட்சம் மதிப்பில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம். மேலும், உயர் சிகிச்சை மேற்கொள்ளவும், பொதுமக்களின் உயிரை காப்பாற்றுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டப்பட்டு வருகிறது. அதில் ஆத்தூர் வட்டத்தில் 3000 கலைஞர் கனவு இல்லம் கட்டப்பட்டு வருகிறது. எனவே, வீடு இல்லாதவர்கள் இம்முகாமில் மனுக்கள் வழங்கி இலவச வீட்டுமனை பட்டா மற்றும் கலைஞர் கனவு இல்லம் கட்டித் தருவதற்கான ஆணைகளை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வாகனத்தின் மூலம் அவர்களின் வீட்டிற்கே குடிமைப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், சுகாதாரம், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட இந்த அரசு தயாராக உள்ளது. இது உங்களுடைய அரசு, மக்களின் அரசு, என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாஷ், ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.கண்ணன், திரு.மலரவன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.