மூடு

‘Coffee with Collector’ – பெற்றோர் இருவரையும் இழந்த, பெற்றோரில் ஒருவரை இழந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பை முடித்து தமிழ்நாடு அரசின் உதவியுடன் உயர்கல்வி பயின்று வரும் மாணவ/மாணவியருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் த

வெளியிடப்பட்ட தேதி : 17/09/2025
.

செ.வெ.எண்:-61/2025

நாள்:-15.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

‘Coffee with Collector’ – பெற்றோர் இருவரையும் இழந்த, பெற்றோரில் ஒருவரை இழந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பை முடித்து தமிழ்நாடு அரசின் உதவியுடன் உயர்கல்வி பயின்று வரும் மாணவ/மாணவியருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 08.09.2025 வரை 11 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 250 மாணவ/மாணவியர், தலைமையாசிரியர்/ஆசிரியர்கள் 25 பேர் மற்றும் பிறதுறைகளைச் சார்ந்த 50 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று (15.09.2025) பன்னிரெண்டாவது நிகழ்வாக பெற்றோர் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பை முடித்து தமிழ்நாடு அரசின் உதவியுடன் உயர்கல்வி பயின்று வரும் 22 மாணவ/மாணவியருடன் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது மாணவ/மாணவியரின் நலன் மற்றும் முன்னேற்றம் சார்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் சிறப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விரிவாக எடுத்துரைத்தார்.

இன்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, துவக்கி வைக்கப்பட்ட உன்னத திட்டமான ‘அன்புக்கரங்கள்’ குறித்து பேசினார். உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு என்ன உதவிகள் தேவை என்றாலும் அதற்கு மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும் என்றும், படித்த துறையில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வழிகள், வங்கிக் கடன் பெறுதல், பிற தனியார் துறை வாய்ப்புகள் குறித்தும் விளக்கிக் கூறினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூறியதைப் போல நீங்கள் தனித்துவம் மிக்கவர்கள், பெற்றோரின் குழந்தைகள் மற்றவர்கள் ஆனால் நீங்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் குழந்தைகள் என்றார். நீங்கள் படித்த படிப்பு வீண்போகாது, நல்ல பாடப்பிரிவுகளைத் தேர்தெடுத்து படித்துள்ளீர்கள், இதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளும் உண்டு என்றும் தெரிவித்தார். தொடர்புகொள்ளுதல், முடிவெடுத்தல் மற்றும் மென்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். செவிலியர் பயிற்சி முடித்தவர்கள் தவறாது நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும், வேலைவாய்ப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் இணையதள பக்கங்கள் அனைத்தையும் தவறாது பார்க்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் பெற்றோர் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு கூடுதல் முன்னுரிமை வழங்கும் என்றும், உங்களுக்கான தமிழ்நாடு அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அடிப்படை கணிதத்திறன்களை வளர்த்துக் கொள்ளுதல், தம்முடைய துறையில் புதிய மற்றும் தெரியாத விபரங்களை அறிந்துகொள்ளுதல், போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பாக தயார்செய்தல், நேர மேலாண்மை குறித்தும் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ/மாணவியர் உற்சாகமுடன் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டதோடு, இந்த சிறப்பு வாய்ப்பினை தங்களுக்கு வழங்கியதற்காக நன்றிகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முனைவர்.பா.சத்தியநாராயணன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் திருமதி.ச.பிரபாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.