பசுமை இயக்க தினத்தை முன்னியட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் வனத்துறை சார்பில் அமைதி கல்வியியல் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது
செ.வெ.எண்:-91/2025
நாள்:-24.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
பசுமை இயக்க தினத்தை முன்னியட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் வனத்துறை சார்பில் அமைதி கல்வியியல் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இந்தியாவின் வனபரப்பு 33 சதவீதமாக இருக்கின்ற நிலையில் தமிழ்நாட்டின் வனப்பகுதி 23 சதவீதமாக உள்ளது. அதனை 10 சதவீதம் உயர்த்திட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2021-ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழ்நாட்டை பசுமை மாநிலமாக உருவாக்கிட வேண்டும் என்ற திட்டத்தை முன்னெடுத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து. பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் வனத்துறை சார்பில் அமைதி கல்வியியல் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் விழா இன்று (24.09.2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் அமைதி கல்வியியல் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்யும் விழாவினை துவக்கி வைத்தார்கள்.
வனத்துறை மூலமாக நாவல் மரம், வேம்பு, புங்கை, புளியமரம் போன்ற 1200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடப்பட்டன. மேலும் இன்று முதல் அக்டோபர் மாதம் வரை மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமின்றி சுற்றுசூழல் மற்றும் வனத்துறை மூலம் இயற்கையை பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக தற்பொழுது Green Tamilnadu Mision என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.
நாம் சுவாசிப்பதற்கு மிகவும் இன்றியமையாதது ஆக்ஸிஜன். 30 நொடிகள் கூட ஆக்ஸிஜன் இல்லாமல் நம்மால் உயிர் வாழ முடியாது. நாம் சுவாசிப்பதற்கு மூச்சினை உள்ளிழுக்கும் பொழுது ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கார்பன்டை ஆக்ஸைடை வெளியிடுகிறோம்.
நம்முடைய வாழ்க்கைக்கு வீடு, பள்ளி, சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் அத்தியாவசியமான தேவைகள் ஆகும். அதனை ஊக்கப்படுத்தும் விதமாக பசுமை தமிழ்நாடு இயக்கம் கொண்டு வந்துள்ளோம்.
தமிழ்நாட்டில் வனப்பரப்பு 23% உள்ளது. அதனை குறைந்தபட்சம் 33% ஆக உயர்த்துவதற்கு Green Tamilnadu Mision திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இதனால் மனிதருக்கு தூய்மையான காற்று கிடைக்கும். நாம் வனப்பரப்பை அதிகப்படுத்தும் வகையில் நம் அனைவரும் நம் வீட்டின் முன் ஒரு மரம் நட்டு வளர்த்து இயற்கையை பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இயற்கையை பாதுகாப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பசுமை தமிழ்நாடு இயக்கம் என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும். இயற்கையை மிகவும் பாதுகாப்பாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பராமரிக்க வேண்டும். மேலும் நாம் சுவாசிப்பதற்கு இன்றியமையாத ஆக்ஸிஜனை நம்மால் உருவாக்க முடியாது எனவே நாம் அனைவரும் ஆக்ஸிஜனை உருவாக்கி தரும் இயற்கையை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசினார்.
அதனைத்தொடர்ந்து வினாடிவினை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற ”பசுமைப்பள்ளி” – நா.பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, மற்றும் இடையக்கோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேடயங்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் திரு.ராஜ்குமார்,இ.வ.ப., உதவி வனப்பாதுகாவலர் செல்வி.வேலுமணி நிர்மலா மற்றும் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.