திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான பூப்பந்து விளையாட்டு போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள்
செ.வெ.எண்:-13/2025
நாள்:-07.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான பூப்பந்து விளையாட்டு போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள்
திண்டுக்கல் மாவட்டம் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று (07.10.2025) மாநில அளவிலான கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான பூப்பந்து விளையாட்டு போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் 38 மாவட்டத்தைச் சார்ந்த சுமார் 760 வீரர், வீராங்கனைகள், அணி மேலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசு தலா ரூ.75,000, 2 ஆம் பரிசு ரூ.50,000 மற்றும் 3-ஆம் பரிசு ரூ.25,000 வீதம் என மொத்தம் ரூ.30,00,000 பரிசுத்தொகையும் மற்றும் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கப்படும். மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் விளையாட்டுச் சீருடைகள், வரவேற்பு கிட் (Welcome kit) மற்றும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து, அனைத்து வகையான உதவிகளையும் செய்து, விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி வருகின்றார்கள். மாநில அளவிலான போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்பொழுது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி முதல் சென்னை வரை மற்றும் நீலகிரி முதல் நாகப்பட்டினம் வரையிலும் 38 மாவட்டங்களை சார்ந்த பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளார்கள்.
இந்நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்டத்திற்கு கிடைத்த மிகவும் முக்கியமான ஒரு வாய்ப்பு. திண்டுக்கல் மாவட்டம் பல்வேறு இயற்கை சூழல்கள் நிறைந்த மாவட்டமாக இருந்தாலும் நிறைய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்கி வருகிறது. மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி 10,00,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை கொண்டு சிறப்பாக பல்வேறு விளையாட்டுக்களைக் கொண்டு விளையாட்டுத் திருவிழாவாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
விளையாட்டு என்பது வெற்றி, தோல்வி என்பது மட்டுமல்லாமல் ஒரு மனிதருடைய ஒழுக்கம், அணி ஒற்றுமை, தைரியமான சூழலை எதிர்கொள்ளக்கூடிய குடிமகனை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல் வேலைவாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருந்த விளையாட்டு வீரர்களுக்கான முன்னுரிமையை நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் 3 சதவீதமாக வழங்கினார்கள். இதனால் விளையாட்டு வீரர்கள் கல்லூரியில் மேற்படிப்பிற்கு செல்வதற்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணி புரிவதற்கும் முன்னுரிமை பெற்றுள்ளனர்.
விளையாட்டை எந்த அளவிற்கு மேம்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு விளையாட்டு வீரர்களையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்கள் மூலமாக அடுத்த தலைமுறையினருக்கு ஒரு முன் உதாரணத்தையும் ஏற்படுத்தும் வகையில் மிகப்பெரிய முயற்சியை தமிழ்நாடு அரசும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். எனவே வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும் மாநில அளவிலான கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான பூப்பந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு பயன்பெற பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகை புரிந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து அவர்களுக்கு உற்சாகத்தினை ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.சிவா, தமிழ்நாடு பூப்பந்தாட்ட மாநில துணைத்தலைவர் டாக்டர்.சீனிவாசன், PSNA பொறியியல் கல்லூரி புரோ சேர்மென் திரு. R S K. ரகுராம் அவர்கள், முதல்வர் முனைவர். D. வாசுதேவன் அவர்கள், இணைப்பதிவாளர் மற்றும் தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகத்தின் செயலாளர் முனைவர் J. விஜய் அவர்கள், திண்டுக்கல் கழக நிர்வாகிகள், மாவட்ட பூப்பந்து கழக உறுப்பினர்கள் நடுவர்கள் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.