அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி சுற்றுலாப் பயணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
செ.வெ.எண்:-35/2025
நாள்:-14.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி சுற்றுலாப் பயணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் பழனி ரோடு, அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (14.10.2025) அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி சுற்றுலாப் பயணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி நிறுவனங்களுக்கு களப்பயணம் செல்வதன் மூலம் உயர்கல்வி குறித்த அச்சம் / குழப்பங்கள் களைந்து உயர்கல்வி அனைவருக்கும் சாத்தியம் என்ற தன்னம்பிக்கையை உருவாக்குகிறது. இந்த களப்பயண அனுபவத்தை கல்லூரிகளுக்குச் சென்று வந்த மாணவர்கள் பிற மாணவர்களிடம் வகுப்பறைகளில் பகிர்ந்து கொள்ளும்போது மாணவர்களுக்கு உற்சாகத்தை தரும் விதமாக அமையும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 89 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 4152 மாணவ, மாணவியரை உயர்கல்வி நிறுவனங்களுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லத்திட்டமிட்டு, முதல் கட்டமாக 14.10.2025 அன்று திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பழனி ரோடு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கச்சேரி தெரு மற்றும் நேருஜி நினைவு நகரவை மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 286 மாணவ, மாணவியர்கள் களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட மருத்துவக்கல்லூரி, அண்ணா பொறியியல் கல்லூரி, ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையம், எம்.வி.எம் அரசு பெண்கள் கலைக் கல்லூரி மற்றும் ஜி.டி.என் கலைக் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவியர் களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிகழ்வில் மாணவ, மாணவியரிடையே உயர்கல்வியின் அவசியம் குறித்தும், பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும்போதே அதற்குரிய வழிகாட்டுதல்கள் மற்றும் புரிதல்கள் பெறுவது அவசியம் என்றும் களப்பயணத்தின் போது அனைத்துவித சந்தேகங்களையும் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் எனவும், உயர்கல்வியில் சேர்க்கை பெறுவது என்பது வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் நிகழ்வாகும். எனவே சிறந்த கல்லூரிகளைத் தெரிவு செய்து விரும்பிய பாடப்பிரிவில் சேர்க்கை பெறுவது அவசியம் என்றும் நன்றாக படித்து வாழ்வில் உயர்வுபெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்வில், திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.ப.உஷா, துணை ஆட்சியர் (பயிற்சி) திருமிகு,மு,ராஜேஸ்வரி சுவி, உதவித் திட்ட அலுவலர் திரு.தி.திருப்பதி மற்றும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.