‘Coffee with Collector’ – அரசு போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகி வரும் தேர்வர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
செ.வெ.எண்:-67/2025
நாள்:-27.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
‘Coffee with Collector’ – அரசு போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகி வரும் தேர்வர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 13.10.2025 வரை 16 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 325 மாணவ/மாணவியர், தலைமையாசிரியர்/ஆசிரியர்கள் 30 பேர், மருத்துவர்கள்/செவிலியர்கள் 25 பேர், விவசாயிகள் 37 பேர் மற்றும் பிறதுறைகளைச் சார்ந்த 50 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று (27.10.2025) பதினேழாவது நிகழ்வாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் பயிற்சி மையங்களான மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டம், மாவட்ட மைய நூலகம், மக்களை நோக்கி பயிற்சி மையம், அறிவுசார் மையம் ஆகிய பயிற்சி மையங்களில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களில் 26 நபர்களுடன் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேர்வர்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஆர்வம், வேலைவாய்ப்பு, நான் முதல்வன், வெற்றி நிச்சயம் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முன்னெடுப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விரிவாக எடுத்துரைத்தார்.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் மூலம் நடத்தப்படும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்தும், அதில் முழு ஈடுபாட்டுடன் நிர்ணயித்த இலக்கை நோக்கிச் சென்றால் வெற்றி பெற முடியும் என ஊக்கப்படுத்தினார். மாதிரித்தேர்வுகளில் தொடர் பயிற்சி, குறிப்பு நூல்கள் பயன்பாடு, தமிழ் வினாத்தாட்கள் மூலமாக பயிற்சி எடுத்துக் கொள்ளல், ஏற்கனவே போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் மூலம் சிறப்பு அமர்வுகள் நடத்துதல், ஆன்லைன் மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் வண்ணம் கணினிவழி பயிற்சி வழங்குதல், உடற்தகுதித் தேர்வுகளுக்கு சிறப்பாகத் தயாராகும் பொருட்டு உரிய பயிற்றுநர்களிடம் பயிற்சி பெறுதல், குறிப்பாக மகளிருக்கு உடற்தகுதித் தேர்வுகளுக்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்தல், அன்றாட நிகழ்வுகள் தொடர்பான தொகுப்புப் புத்தகங்கள், இயர்புக், பாடநூல்கள் மூலமாக தேர்வுகளுக்குத் தயாராகுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
மேலும், தமிழ்நாடு அரசின் மெய்நிகர் கற்றல் இணைய முகப்பினை பயன்படுத்துதல் தொடர்பான செய்முறை விளக்கமும் இணையதளம் வாயிலாக இக்கூட்டத்தில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.மு.கோட்டைக்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.மு.ராஜேஸ்வரி சுவி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மைய உதவி இயக்குநர் திருமதி.ச.பிரபாவதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு.அ.ராப்சன் டேவிட், மாவட்ட திறன் அலுவலர் திருமதி.பொ.பவித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.