மூடு

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் 16 தங்கம், 4 வெள்ளி மற்றும் 12 வெண்கல பதக்கங்கள் மற்றும் பரிசு தொகையான ரூ.62.25 கோடி பெற்று சாதனை படைத்துள்ளார்கள். இத்திட்டங்களின் வாயிலாக பயனடைந்த விளையாட்டு வீரர்கள் மாண்புமிகு தமிழ்நாடு

வெளியிடப்பட்ட தேதி : 05/11/2025

செ.வெ.எண்:- 16/2025

நாள்:- 04.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் 16 தங்கம், 4 வெள்ளி மற்றும் 12 வெண்கல பதக்கங்கள் மற்றும் பரிசு தொகையான ரூ.62.25 கோடி பெற்று சாதனை படைத்துள்ளார்கள். இத்திட்டங்களின் வாயிலாக பயனடைந்த விளையாட்டு வீரர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

தமிழ்நாடு அரசு இளைஞர்களின் ஆர்வத்தை நல்வழிப்படுத்தி விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுத்திட 1992-ஆம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை உருவாக்கியது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் மாநிலத்தின் விளையாட்டிற்கான உயர் அமைப்பு ஆகும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் விளையாட்டு மேம்பாட்டுத்துறையினை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். விளையாட்டு துறை சார்பாக பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், பேரறிஞர் அண்ணா விரைவு சைக்கிள் போட்டிகள், பேரறிஞர் அண்ணா மராத்தான் போட்டிகள், அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், நீச்சல் கற்பித்தல் பயிற்சி முகாம் மற்றும் கோடைகால பயிற்சி முகாம் என பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2021-22 ஆம் ஆண்டின் சட்டமன்ற பேரவை நிதி அறிக்கையின் கீழ் கிராமபுற இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு பயனுள்ளதாகவும், விளையாட்டுத் திறனை மேம்படுத்துகின்ற ஒரு வளர்ச்சி மையமாக மாற்றுகின்ற வகையில் அரசின் முதன்மை திட்டமாக அறிவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் விளையாட்டுத் திறனை விரிவுபடுத்துகின்ற வகையில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் சிறிய விளையாட்டரங்கம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே திண்டுக்கல் தொகுதியில் மாவட்ட விளையாட்டரங்கம், நிலக்கோட்டை மற்றும் நத்தத்தில் சிறுவிளையாட்டரங்கம் செயல்பட்டு வருகிறது.

ஆத்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய தொகுதிகளில் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் சிறுவிளையாட்டரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வேடசந்தூர் தொகுதியில் சிறுவிளையாட்டரங்கம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பயிற்சி மற்றும் செயல் திறனை மேம்படுத்துவதில் இருப்பிட பயிற்சியின் பங்கு ஈடுஇணையில்லாதது. தமிழ்நாடு அரசு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாநிலத்தில் விளையாட்டு விடுதிகளை நிறுவி, மாணவ, மாணவிகளின் விளையாட்டு நுணுக்கம் மற்றும் திறனை மேம்படுத்த சிறப்பு பயிற்சிகளை வழங்குகிறது.

விளையாட்டு விடுதிகளை மாணவ, மாணவிகள் குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் பெருமளவில் பயன்படுத்துகின்றனர். இந்த விளையாட்டு விடுதிகளில் அறிவியல் பூர்வமான விளையாட்டுப் பயிற்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய வசதிகள், உண்டு உறைவிட வசதிகள் வழங்கப்படுகின்றன. மாணவ, மாணவிகள் தங்களது கல்வியினை அருகாமையில் உள்ள பள்ளிகளில் தொடரலாம். தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் 27 விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகிறது.

ஒரு மாணவிக்கு ஒரு நாளுக்கு ரூ.250 வீதம் உணவு மானியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு மாணவிக்கு ஒரு நாளுக்கு ரூ.350 வீதம் உணவு மானியம் உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. விடுதி மாணவிகளுக்கு சத்தாண உணவுகள் வழங்கப்படுகிறது. நாள்தோறும் அசைவ உணவு, பருவகால பழவகைகள், உலர்ந்த பழங்கள், பால், முட்டை சிற்றுண்டிகள், சத்துமாவு கஞ்சி போன்ற சத்தாண உணவுகள் வழங்கப்படுகின்றன. மேலும் விடுதியில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு தோறும் விளையாட்டுச் சீருடைகள், காலணிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் தடகளம், கூடைப்பந்து மற்றும் கால்பந்து விளையாட்டிற்கான மாணவிகள் விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது. இவ்விடுதியில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாணவிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்வு போட்டிகளில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டு விடுதியில் தங்கி பயின்று வருகிறார்கள்.

விடுதியில் தற்போது 70 மாணவிகள் பயின்று வருகிறார்கள். விடுதியில் பயிற்சி பெறும் மாணவிகளை பல்வேறு வகையாக மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு சாதனைபடைத்து வருகிறார்கள்.2023 – தேசிய அளவிலான இளையோர் மகளிர் கால்பந்து போட்டி ஒடிசாவில் நடைபெற்றதில் சரோன் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்.

தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் போட்டிகள் கால்பந்து போட்டிகள் 03.05.2025 முதல் 17.05.2025 வரை பீகார் மாநிலத்தில் நடைபெற்றது. அதில் தமிழக அணி சார்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவி சாரோன் மற்றும் நேத்ராலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். தேசிய அளவிலான சீனியர் பெண்கள் கால்பந்து போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலத்தில் 01.10.2025 முதல் 15.10.2025 வரை நடைபெற்றதில் தமிழக அணியில் விளையாட்டு விடுதி மாணவி சரோன் பங்கேற்று வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதில்லை. இப்போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு அதில் சிறந்த விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். மாநில அளவிலான தனிநபர் போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.1.00 லட்சம், 2ஆம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.75,000 மற்றும் 3 ஆம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.50,000 வீதமும், குழு போட்டிகளில் முதலிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.75,000மும் ,2ஆம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.50,000 மற்றும் 3 ஆம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.25,000 என வழங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் தனிநபர் மற்றும் குழு போட்டிகளுக்கான மொத்த பரிசு தொகை ரூ.37 கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகள் பெற இயலும். இந்த ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளர்கள் ஆகிய ஐந்து பிரிவுகளில் ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், நடைபெற்றது இதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 16,889 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக 677 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள்.

இந்த ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் திண்டுக்கல் மாவட்டம் மாநில அளவிலான பதக்கப் பட்டியலில் 16 தங்கம், 4 வெள்ளி மற்றும் 12 வெண்கல பதக்கங்கள் பெற்று 92 வீரர், வீராங்கனைகள் மொத்த பரிசு தொகையான ரூ.62,25,000 பெற்று மாநில அளவில் 5 ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். தமிழக அரசு, விளையாட்டுத்துறையில் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் மூலம் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஊக்கப்படுத்தப்படுவதுடன், தேசிய மற்றும் உலக அளவில் விளையாட்டுத்துறையில் தமிழக வீரர்கள் சாதனைப் படைக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவிகள் அதிகளவில் சாதனை படைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்ள மாணவிகள் விடுதி தங்கி பயிற்சி பெற்று வரும் மாணவி மோ.சேரன் தெரிவித்ததாவது:-

என் பெயர் மோ.சேரன். என் தாயார் திருமதி சரோஜினி, என் தந்தையின் பெயர் திரு.மோசஸ். நான் 9 வயதில் என் தந்தையை இழந்தேன். எனக்கு அண்ணன் உள்ளார். அவரின் பெயர் திரு.சாமுவேல்.என் தாயார் எனக்கு 10 வயதில் இருந்து பள்ளியில் விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். எனக்கு கால்பந்து விளையாடுவதில் ஆர்வம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தேன். தற்போது நான் திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறேன். நான் 14 வயதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம்(SDAT) விளையாட்டு விடுதியில் கால்பந்து விளையாட்டில் சேர்ந்தேன். அந்த விடுதி எனது திறமையை வெளிப்படுத்த சிறந்த பயிற்சிகளை அளித்து, எனது ஆட்டத்திறனை மேம்படுத்தியது. அதன் மூலம் நான் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பைப்பெற்றேன்.

கடந்த முறை, கேலோ இந்தியா யூத்கேம்ஸ் 2025 போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றதற்காக, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உயர்தர காலணியை (ஷூ) பரிசாக வழங்கினார். அது எனக்கு மிகுந்த ஊக்கமாக இருந்தது. இப்போது நான் மூத்தோர் தேசிய கால்பந்து போட்டியில் விளையாடியுள்ளேன். இது எனக்குப் பெரும் சாதனையாகும், ஏனெனில் பெரும்பாலும் பள்ளி மாணவிகள் மூத்த வீராங்கனைகளுடன் போட்டியிடுவது கடினம். அது எனக்கு ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. இவை அனைத்தும் எனது (SDAT) விளையாட்டு விடுதியின் காரணமாகவே சாத்தியமானது. எப்போதும் எங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலர் அனைவருக்கும் ஊக்கமும் ஆதரவையும் அளித்து வருகிறார்.

மேலும் நான் ஜூனியர் பெண்கள் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப், புவனேஷ்வர் (ஒடிசா)-2023ஆம் ஆண்டில் வெள்ளிப் பதக்கம் பெற்றோம். ஜூனியர் பெண்கள் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப், ஆனந்தபுரம் (ஆந்திரா) 2024ஆம் ஆண்டில் வெண்கலப் பதக்கம் பெற்றோம். எஸ்.ஜி.எப்.ஐ.(SGFI) U-17 கால்பந்து தேசிய சாம்பியன்ஷிப், ஜம்மு-2024ஆம் ஆண்டில் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினேன். கெஹ்லோ இந்தியா யூத்கேம்ஸ், பேகுசரை (பீஹார்) – 2025ஆம் ஆண்டில் வெள்ளிப் பதக்கம் பெற்றோம்.

30-வது மூத்த பெண்கள் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப், சட்டீஸ்கர்-2025-ஆம் ஆண்டில் வெண்கலப் பதக்கம் பெற்றோம். இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக முதலில் நாங்கள் கேரளாவுடன் தகுதிச்சுற்றில் விளையாடினோம். அந்தப் போட்டியில் இரண்டாம் பாதி முடிவில் 1-1 என சமனாக இருந்தது. 87-வது நிமிடத்தில் நான் தமிழ்நாட்டுக்காக இரண்டாவது கோலை அடித்தேன். அதன் மூலம் நாங்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றோம்.

விடுதியில் நல்ல சத்தான உணவு வகைகள், விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதுடன் சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கின்றனர். இது என்னைப்போன்ற ஏழை மாணவிகளின் திறமையை வெளியே கொண்டுவர மிகவும் பயனுள்ளதாக உள்ளது. குறிப்பாக ஏழை பெண்கள் விளையாட்டில் சாதனை படைக்க நல்ல வாய்ப்பாக உள்ளது. இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும் தமிழக அரசுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், என தெரிவித்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.