பத்திரிக்கை செய்தி
செ.வெ.எண்:-18/2025
நாள்: 04.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி
தமிழ்நாட்டில் “பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி” திட்டமானது பிப்ரவரி 2019-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தலா ரூ.2000/- வீதம் ஆண்டிற்கு 6000/- ரூபாய் மூன்று தவணைகளில், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாய குடும்பங்களுக்கு உதவித்தொகையாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
ஒன்றிய அரசு பி.எம்.கிசான் பயனாளிகளுக்கு, வரும் காலங்களில் தவணைத்தொகை பெற தனித்துவ அடையாள அட்டை எண் அவசியம் என உறுதியாக தெரிவித்துள்ளது.
விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் அல்லது தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டோ அல்லது பொது சேவை மையத்தின் மூலமாகவோ தங்களது ஆதார் எண், சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுடன் சென்று உடனடியாக பதிவு செய்து தனித்துவ அடையாள அட்டை எண் பெறலாம்.
எனவே, பி.எம்.கிசான் தவணைத்தொகை தொடர்ந்து கிடைத்திட இதுநாள் வரை தனித்துவ அடையாள அட்டை எண் பெறாத விவசாய பயனாளிகள் தங்கள் வட்டார வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு தனித்துவ அடையாள எண்ணுக்கு பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.