‘Coffee with Collector’ 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ/மாணவியருக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
செ.வெ.எண்:-57/2025
நாள்:-13.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
‘Coffee with Collector’ 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ/மாணவியருக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 10.11.2025 வரை 19 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 350 மாணவ/மாணவியர், தலைமையாசிரியர்/ஆசிரியர்கள் 30 பேர், மருத்துவர்கள்/செவிலியர்கள் 25 பேர், விவசாயிகள் 37 பேர், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் 26 பேர், கொடைக்கானல் ஒன்றியத்தைச் சார்ந்த 25 இளைஞர்கள் மற்றும் பிறதுறைகளைச் சார்ந்த 50 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று (13.11.2025) இருபதாவது நிகழ்வாக 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ/மாணவியருக்கான உயர்கல்வி வழிகாட்டல் தொடர்பான ‘சிறப்பு Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2024-25 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு முடித்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவ/மாணவியரின் எண்ணிக்கை 21070 ஆகும். இவர்களுள் தற்போதுவரை, 20928 மாணவ/மாணவியர் உயர்கல்வியில் சேர்க்கை பெற்றுள்ளனர். இது மொத்த மாணவ/மாணவியர் எண்ணிக்கையில் 99.33% ஆகும். முந்தைய 2023-24 ஆம் கல்வியாண்டில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவ/மாணவியர் சதவீதம் 82% ஆகும். இதனுடன் ஒப்பிடுகையில் தற்போது உயர்கல்வி சேர்க்கை சதவீதம் 17% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டில் இன்னும் உயர்கல்வியில் சேராத அனைத்து மாணவ/மாணவியரையும் அவர்கள் 12-ஆம் வகுப்பில் பயின்ற பாடப்பிரிவின் அடிப்படையில் அவர்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒரு உயர்கல்வியில் சேர்க்கை பெறுவதை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகத்தின் இலக்காகும். 12-ஆம் வகுப்பு முடித்த பின்பு, உயர்கல்வியில் சேர்ந்து, அதன் மூலமாக வேலைவாய்ப்பு பெறுவதை அனைவரும் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். நம்முடைய படிப்பும், பணியுமே நமக்கான அடையாளம் ஆகும். கல்லூரிப் படிப்பு மட்டுமின்றி உடனடி வேலைவாய்ப்புடன் கூடிய பல்வேறு பல்தொழில்நுட்ப / தொழிற்பயிற்சி / சான்றிதழ் படிப்புகள் / திறன் வளர்ப்புப் பயிற்சிகள் உள்ளன. தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் உதவித் தொகையுடன்கூடிய பயிற்சிகளிலும் சேர்ந்து பயன் பெறலாம்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரகத்தின் தரைத்தளத்தில் ‘திறனகம்’ அமைக்கப்பட்டு இது தொடர்பான பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குடும்பச்சூழல், சிறிய அளவிலான உடல்நலப் பாதிப்பு உள்ளிட்ட விக்ஷயங்களில் கவலை கொள்ளாமல் தீவிர முயற்சி மேற்கொண்டால் நம் வாழ்வு உயர்ந்த நிலைக்குச் செல்லும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உறுதுணை புரியும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ/மாணவியர் தாங்கள் இதுவரை எந்த உயர்கல்வியிலும் சேரவில்லை என்றும், மாவட்ட ஆட்சியரின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவில் சேர்ந்து பயில்வோம் என கூறினர்.
இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா மணி, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.மு.ராஜேஸ்வரி சுவி, மாவட்ட திறன் அலுவலர் திருமதி.பொ.பவித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.