மூடு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளிமந்தையம் ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்ட

வெளியிடப்பட்ட தேதி : 17/11/2025
.

செ.வெ.எண்:-67/2025

நாள்: 15.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளிமந்தையம் ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து, வியாட்ரிஸ் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதி மூலம் கீரனூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு பொது சுகாதார திடக்கழிவு மேலாண்மை திட்ட பயன்பாட்டிற்காக ரூ.9.25 இலட்சம் மதிப்பீட்டிலான ஒரு டிரெயிலருடன் கூடிய டிராக்டர் வண்டியினை வழங்கினார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளிமந்தையம் ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை இன்று (15.11.2025) தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, வியாட்ரிஸ் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதி மூலம் கீரனூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு பொது சுகாதார திடக்கழிவு மேலாண்மை திட்ட பயன்பாட்டிற்காக ரூ.9.25 இலட்சம் மதிப்பீட்டிலான ஒரு டிரெயிலருடன் கூடிய டிராக்டர் வண்டியினை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும், கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, வரும் முன் காப்போம் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் நோய் வருவதற்கு முன்பாக அவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய இரத்த பரிசோதனை, இசிஜி, சக்கரை பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் இம்முகாமில் மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் வழியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை 02.08.2025-அன்று சென்னையிலிருந்து தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின்படி, அனைத்து வகையான மருத்துவக் கருவிகளும், சிறப்பு மருத்துவ நிபுணர்களும் கலந்துகொண்டு, பொதுமக்களை பரிசோதனை செய்து, யாருக்காவது நோய் கண்டறியப்பட்டால் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளன. மருத்துவமனையில் உள்ள அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் இந்த முகாமிலேயே மேற்கொள்ளும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 3 முகாம்கள் வீதம் 45 முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் 17 சிறப்பு மருத்துத் துறைகள் உட்பட 45க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.

இந்தியாவிலேயே முதன் முறையாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்கள். இத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நாடுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் மாணவர்களுக்கு ”தமிழ்ப்புதல்வன்” திட்டம் போன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ளார்கள். படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

அதனைத்தொடர்ந்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட நபர்களுக்கு ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பெறப்படும் மனுக்களில் தகுதியான நபர்களுக்கு வருகின்ற 15.12.2025-அன்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கிராமப்புற மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக புதிய கல்லுாரிகளை தொடங்க அனுமதி அளித்து வருகிறார்கள். ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கிடைப்பதற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு மட்டும் 119 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்படும். காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு மின் இணைப்பு பெறப்பட்டதைத் தொடர்ந்து, கரூர் வேலாயுதம்பாளையத்திலிருந்து தண்ணீர் சுத்திகரிப்பதற்காக 10 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டுள்ள அரவக்குறிச்சிக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. தண்ணீர் முழுமையாக வந்து சேர்ந்தவுடன் சுத்திகரிக்கப்பட்டு பழனி வட்டத்திற்குட்பட்ட 16 ஊராட்சிகளுக்கும், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 77 ஊராட்சிகளுக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு வருகின்ற 30 ஆண்டு காலத்திற்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது.

அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக்கல்லுாரி மாணவிகளுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு பழனி திருக்கோயில் சார்பில் வழங்கப்படுகிறது. இந்தக் கல்லுாரிக்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை அடையாறில் உள்ள அண்ணா இன்ஸ்டிடியூட்டுக்கு அடுத்தபடியாக காளாஞ்சிப்பட்டி பயிற்சி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல், காளாஞ்சிபட்டியில் 35 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.8.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகளும், தொப்பம்பட்டியில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேறற்ற பின்னர் ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. மேலும், கள்ளிமந்தையம் ஊராட்சியில் 30 படுக்கை வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல, கீரனூர் ஊராட்சியில் 30 படுக்கை வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதல்படியும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 6800 நியாய விலைக் கடைகளுக்கு ரூ.53 கோடி மதிப்பீட்டில் புதிய விற்பனை முனைய இயந்திரம் வழங்கும் விழாவினை 14.11.2025-அன்று தொடங்கி வைத்துள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் 822 முழு நேர கடைகளும், 478 பகுதி நேரக் கடைகளும், 122 நகரும் நியாய விலைக் கடைகளும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 140 முழு நேர கடைகளும், 119 பகுதி நேரக் கடைகளும், 6 நகரும் நியாய விலைக் கடைகளும் செயல்பட்டு வருகிறது. மேலும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 107 நியாய விலைக் கடைகளும், 4 நகரும் நியாய விலைக் கடைகளும் புதிதாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய கிளைகள் 2 எண்ணிக்கையிலும், புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பதிவு அலுவலகக் கட்டடம் 13 எண்ணிக்கையிலும் கட்டப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அனைத்து குடிமைப்பொருட்களையும் சில்வர் பாத்திரத்தில் வைத்து வழங்குவதற்கும், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி தருவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு 21 இலட்சம் பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஒட்டன்சத்திரம் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து ஊராட்சிப் பகுதிகளுக்கும் தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பரப்பளாறு அணையினை தூர்வாருவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. பரப்பளாறு அணை மற்றும் தலைக்குத்து ஏரியினை சுற்றலாத் தளமாக உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.35,000 மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகையினையும், 2 பயனாளிக்கு தலா ரூ.20,000 மதிப்பீட்டில் மொத்தம் ரூ.40,000 மதிப்பீட்டிலான திருமண உதவித்தொகையினையும், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.1,200 மதிப்பீட்டில் மொத்தம் ரூ.4,800 மதிப்பீட்டிலான உதவித்தொகையினையும் வழங்கினார். மேலும், கற்பிணி தாய்மார்களுக்கு சத்துணவு பெட்டகத்தையும், மகப்பேறு சஞ்சிவி பெட்டகத்தையும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், பழனி மாவட்ட சுகாதார இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.உதயக்குமார், பழனி மாவட்ட சுகாதார துணை இயக்குநர் மரு.அனிதா, தொப்பம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் திரு.கே.கோகுல், தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.தாஹிரா, ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பிரபு பாண்டியன் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.