மூடு

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 24/11/2025
.

செ.வெ.எண்: 90/2025

நாள்: 21.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (21.11.2025) நடைபெற்றது.

இன்றையக் கூட்டத்தில், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒட்டன்சத்திரம் பகுதியில் இரவு நேரங்களில் மணல் திருடு போகிறது. ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் சாக்கடை நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. சாக்கடை கழிவுநீர் நங்காஞ்சியாறு அணையில் கலக்கிறது. அதனை தடுத்திட வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும், நாகையகோட்டை பகுதியில் கல்குளம் ஆக்கிரமிப்பினை 80 சதவீதம் அகற்றப்பட்டுள்ளது எனவும், புதுரோடு நான்குவழிச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பினை அகற்றிட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

குஜிலியம்பாறை பகுதிக்கு வரும் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வதற்கான பாதையை சரிசெய்து தர வேண்டுமெனவும், பயணிகள் நிற்பதற்கு நிழற்குடை (சட்டர்) அமைத்திட வேண்டுமெனவும், குஜிலியம்பாறையில் உள்ள மருத்துவமனையை தரம் உயர்த்திட வேண்டுமெனவும், தங்கள் பகுதியில் அரசு கலை கல்லுரி புதியதாக தொடங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தார்.

நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி தங்கள் பகுதியில் உள்ள விவசாயிகள் நிறைய பேர் பாம்பு கடியினால் பாதிக்கப்படுகின்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடிக்கு மருந்துகள் தயார் நிலையில் வைத்திட வேண்டுமெனவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக பொதுமக்களுக்கு பாம்பு கடித்தால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதலுதவி அனைவருக்கும் வழங்கிட வேண்டுமெனவும், வத்தலக்குண்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்திட வேண்டுமெனவும், விருவீடு பகுதியில் உள்ள சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

பஞ்சம்பட்டியைச் சேர்ந்த விவசாயி தருமத்துப்பட்டியில் உள்ள காய்கறி சந்தையின் பின்புறம் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை தடுத்திட வேண்டுமெனவும் கதிரையன் குளத்தினை சுற்றி இளைஞர்களால் 2,000 பனை மரங்கள் நடவு செய்யப்பட்டது. ஆனால் கதிரையன் குளத்தில் மணல் திருடு போவதால் குளத்தின் தன்மை பாதிக்கப்படுகிறது. அதனை தடுத்திட வேண்டுமெனவும் கூறினார்.

சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயி கூட்டுறவு கடன் வங்கியில் பயிர் கடன் வழங்குவதில்லை. ஒரு வருடம் முடிந்து புதுப்பித்து வைப்பதிலும் கால தாமதம் தாழ்த்துகிறார்கள். இதனை சரிசெய்து பயிர் கடன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் 63 மனுக்கள் அளித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:-

தமிழ்நாட்டிலேயே திண்டுக்கல் மாவட்டத்திற்கு தான் அணையினை தூர்வாருவதற்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பரப்பலாறு அணைக்கு ரூ.19.00 கோடி தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செயது அரசாணை வெளியிட்டுள்ளது. விரைவில் அணையினை தூர்வாருவதற்கு பணிகள் துவங்கப்படும். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காகவும், விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றவதற்காகவும், அவர்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண்பதற்காகவும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாத்திற்கு 60 மனுக்கள் பெறப்பட்டதில் 40 மனுக்களுக்கு பதில் விபரம் பெறப்பட்டு 20 மனுக்கள் நிலுவையில் உள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் பாலாறு பொருந்தலாறு அணை (மொத்த உயரம் 65 அடி) நீர்மட்டம் 40.52 அடி, பரப்பலாறு அணை (மொத்த உயரம் 90 அடி) நீர்மட்டம் 64.06 அடி, வரதமாநதி அணை (மொத்த உயரம் 66.47 அடி) நீர்மட்டம் 66.47 அடி, குதிரையாறு அணை (மொத்த உயரம் 79.99 அடி) நீர்மட்டம் 62.35 அடி, குடகனாறு அணை (மொத்த உயரம் 27.07 அடி) நீர்மட்டம் 18.18 அடி, நங்காஞ்சியாறு அணை (மொத்த உயரம் 39.37 அடி) நீர்மட்டம் 23.16 அடி என்ற அளவில் நீர்மட்டம் உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில், 2025-ஆம் ஆண்டு குளிர் பருவகாலமான ஜனவரி முதல் பிப்ரவரி வரை சராசரியாக 36.12 மி.மீ மழையளவும், கோடை பருவகாலமான மார்ச் முதல் மே வரை சராசரியாக 182.75 மி.மீ மழையளவும், தென்மேற்கு பருவகாலமான ஜுன் முதல் செப்டம்பர் வரை சராசரியாக 118.62 மி.மீ மழையளவும் பொழிந்துள்ளது. வடகிழக்கு பருவகாலமான அக்டோபர் முதல் நவம்பர் (17.11.2025) வரை 188.45 மி.மீ மழையளவு பொழிந்துள்ளது. நவம்பர் மாதத்தில் சராசரியாக 163.80 மி.மீ மழையளவு பொழியும் என இலக்கு நிரணயிக்கப்பட்ட நிலையில் நவம்பர் (17.11.2025) வரை 20.25 மி.மீ மழையளவு பொழிந்துள்ளது.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 01.01.2025 முதல் 30.11.2025 வரை மொத்தம் 771.00 மி.மீ மழையளவு பொழியும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 01.01.2025 முதல் 17.11.2025 வரை 525.94 மி.மீ மழையளவு மட்டுமே பொழிந்துள்ளது. எனவே, இயல்பான மழையளவைக் காட்டிலும் குறைவான மழையளவே பொழிந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 01.04.2025 முதல் 17.11.2025 வரை யூரியா உரம் விநியோகம் 6825 மெ.டன், இருப்பு 2412 மெ.டன், டிஏபி விநியோகம் 2347 மெ.டன், இருப்பு 1896 மெ.டன், பொட்டாஷ் விநியோகம் 3070 மெ.டன், இருப்பு 895 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் விநியோகம் 1065 மெ.டன், இருப்பு 926 மெ.டன், காம்ப்ளக்ஸ் விநியோகம் 4818 மெ.டன், இருப்பு 3463 மெ.டன், அம்மோனியம் சல்பேட் மற்றும் அம்மோனியம் குளோரைடு விநியோகம் 700 மெ.டன், இருப்பு 390 மெ.டன், கலப்பு உரங்கள் விநியோகம் 1341 மெ.டன், இருப்பு 145 மெ.டன் என மொத்தம் 20,166 மெ.டன் உரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 10,127 மெ.டன் உரம் இருப்பு உள்ளன. அதேபோல், விதை உள்ளிட்ட இடுபொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன. எனவே, விவசாயிகள் அரசின் மூலம் வழங்கப்பட்டு வரும் உரங்களை பெற்று பயனபெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) திரு.அ.பாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.நாகேந்திரன், இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) மரு.பாபு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) திரு.பாலமுருகன் அவர்கள் ஆகியோர் உட்பட துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.