மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டங்களை சேர்ந்த 461 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
செ.வெ.எண்:-55/2025
நாள்:-21.12.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டங்களை சேர்ந்த 461 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் முன்னிலையில் தொப்பம்பட்டி வேல் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டங்களை சேர்ந்த 461 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை இன்று(21.12.2025) வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பழனி வட்டங்களை சேர்ந்த புஷ்பத்தூர் ஊராட்சியில் 206 பயனாளிகளுக்கும், ராஜாம்பட்டி ஊராட்சியில் 173 பயனாளிகளுக்கும் மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டங்களை சேர்ந்த சத்திரப்பட்டி ஊராட்சியில் 82 பயனாளிகளுக்கும் என மொத்தம் 461 பயனாளிகளுக்கு ரூ.6.11 கோடி மதிப்பீட்டில் உபரி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி, முதன்மை செயலர்கள், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் ஆகியோர் முழு ஒத்துழைப்புடன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர்கள் உட்பட பல்வேறு அரசு அலுவலர்களின் ஒத்துழைப்புடன் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு புஷ்பத்தூர், ராஜாம்பட்டி, சத்திரப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு 461 பயனாளிகளுக்கு உபரி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை மக்களுக்கு பயன்படக்கூடிய எந்த திட்டமாக இருதாலும் உடனே ஒப்புதல் கொடுத்து செயல்படுத்தி வருகிறார்கள். ஆதிதிராவிடர் மக்கள் அரசின் நலத்திட்டங்கள் பெற அவர்களுக்கான வருமான வரம்பு ரூ.5.00 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கலைஞர் கனவு இல்லமும் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் 2.50 இலட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதம் ரூ.900 வரை சேமிப்பு ஏற்படுகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வினை வளப்படுத்திடும் பொருட்டும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15.09.2023 துவக்கி வைத்தார்கள். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் சுமார் 1.16 கோடி மகளிருக்கு வழங்கினார்கள். தற்போது, இரண்டாம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் 10 ஆயிரம் முகாம் நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 92 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டது. இதில் 63 ஆயிரம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுள்ளது. ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஏற்கனவே 50 ஆயிரம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தற்போது 10 ஆயிரம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 20.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.
6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 12 இலட்சம் மாணவ, மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்தாண்டு 20 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப்புற மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக புதிய கல்லுாரிகளை தொடங்க அனுமதி அளித்து வருகிறார்கள். ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை அடையாறில் உள்ள அண்ணா இன்ஸ்டிடியூட்டுக்கு அடுத்தபடியாக காளாஞ்சிப்பட்டி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொப்பம்பட்டியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், ஒட்டன்சத்திரம் மற்றும் கேதையுறும்பு ஆகிய பகுதியில் தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை 21.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 56 மாதங்களில் 3,256 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும், பொதுமக்களுக்கு தரமான குடிமைப்பொருட்கள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அரிசி, பருப்பு, பாமாயில், சக்கரை ஆகிய பொருட்கள் தரமானதாக வழங்கப்பட்டு வருகிறது. 2 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்ப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முதியோர் உதவித்தொகை ரூ.1000-லிருந்து ரூ.1500 உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்ப்பட்ட உதவித்தொகை ரூ.1000-லிருந்து ரூ.1500 உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பாதிப்பு அதிகமாக இருந்தால் அவர்களுக்கு ரூ.2000-மாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் நகராட்சி பகுதிகளில் ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் தினமும் வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு வராது. அந்த வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சியும் அவர்களின் வாழ்க்கை தரம் உயர்த்த வேண்டும் என்பதற்காக எழை, நடுத்தர மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக என்றென்றும் உறுதுணையுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சைகாந்தி, பழனி வட்டாட்சியர் திரு.பிரசன்னா, ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பிரபு பாண்டியன் உட்பட முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.