பத்திரிகை செய்தி
செ.வெ.எண்:-62/2025
நாள்: 24.12.2025
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிகை செய்தி
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் அடங்கியுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கடந்த 04.11.2025 முதல் 16.12.2025 வரையில் கணக்கெடுப்பு படிவங்கள் (Enumeration Form) வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, அப்படிவங்கள் அனைத்தும் பூர்த்தி செய்து மீளப்பெறப்பட்டு, கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் (Claims and Objections) 19.12.2025 முதல் 18.1.2026 வரையில் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பெறப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வாக்காளர்கள் சமர்ப்பித்துள்ள கணக்கெடுப்பு படிவத்தில் முதல் பகுதியான வாக்காளரின் விபரம் மட்டும் சமர்ப்பித்துள்ள இனங்களில், படிவத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதியில் உள்ள விபரமான 2002–ஆம் வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் இருப்பதற்கான விபரம் அல்லது வாக்காளரின் பெற்றோர் / தாத்தா/பாட்டி ஆகிய விபரங்கள் சமர்பிக்கப்படாத இனங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள 13 ஆவணங்களில் ஒன்றினை சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பித்து வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயரினை உறுதி செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நேர்வில், இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 13 ஆவணங்களில் ஒன்றான இருப்பிட சான்று தற்போது தமிழ்நாட்டில் இணைவழி மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026–னை முன்னிட்டு வருகின்ற 26.12.2025 முதல் 25.01.2026 வரையில் மேற்சொன்ன வாக்காளர்கள் இருப்பிட சான்றினை நேரடியாகவே சம்மந்தப்பட்ட வட்ட அலுவலகத்தில் உள்ள மண்டல துணை வட்டாட்சியர் அல்லது தலைமையிடத்து துணை வட்டாட்சியர்கள் ஆகியோர்களிடம் எவ்வித கட்டணம் இன்றி விண்ணப்பம் செய்து சான்றிதழ் பெற்றுகொள்ள தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கணக்கெடுப்பு படிவத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதியான 2002 வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றுள்ள விபரம் மற்றும் வாக்காளர்களின் உறவினர்களின் விபரம் சமர்ப்பிக்காத வாக்காளர்கள் இந்த வாய்பினை முழுமையாக பயன்படுத்தி சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் இருப்பிட சான்றிதழை சமர்ப்பித்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன். இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.