மூடு

“உங்க கனவ சொல்லுங்க”-திட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 12/01/2026

செ.வெ.எண்: 21/2026

நாள்: 09.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் தமிழ்நாடு அரசின் “உங்க கனவ சொல்லுங்க” எனும் திட்டத்தை இன்று(09.01.2026) தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஊரக மற்றும் நகர்புற பகுதியில் உள்ள குடும்பங்களை கணக்கெடுப்பு செய்திட தன்னார்வலர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள், அடையாள அட்டை மற்றும் தொப்பிகளை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் தமிழ்நாடு அரசின் “உங்க கனவ சொல்லுங்க” எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி ஜோ.இளமதி ஜோதிபிரகாஷ் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் ஊரக மற்றும் நகர்புற பகுதியில் உள்ள குடும்பங்களை கணக்கெடுப்பு செய்திட தன்னார்வலர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள், அடையாள அட்டை மற்றும் தொப்பிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது :-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் சமயத்தில் சொன்னபடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 1.16 கோடி மகளிர் மாதம் ரூ.1000 பெற்று பயனடைந்து வருகின்றனர். இரண்டாம் கட்டமாக 17 இலட்சம் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளியில் படித்து கல்லூரி மேல் படிப்பிற்கு சென்றால் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ”புதுமைப்பெண்” மற்றும் மாணவர்களுக்கு ”தமிழ்ப்புதல்வன்” ஆகிய திட்டங்களின் கீழ் சுமார் 19 இலட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மகளிருக்கான விடியல் பயணத் திட்டம், திறன் மேம்பாட்டிற்கான “நான் முதல்வன்” திட்டம், முதியோர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம்கள், முதியோர்களுக்கான அன்புச்சோலை திட்டம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் “உங்க கனவ சொல்லுங்க” என்ற திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று(09.01.2026) தொடங்கி வைத்துள்ளார்கள்.

அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டம் உங்க கனவ சொல்லுங்க கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது. இதில் 6,40,304 குடும்பங்களை கணக்கெடுப்பு பணிக்கு 1,545 தன்னார்வலர்களை ஈடுபடவுள்ளார்கள். ஊரகப்பகுதியில் உள்ள 4,96,994 குடும்பங்களை கணக்கெடுப்பு செய்திட 1252 தன்னார்வலர்களும், நகரப்பகுதியில் உள்ள 1,43,310 குடும்பங்களை கணக்கெடுப்பு செய்திட 293 தன்னார்வலர்களும் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு அடையாள அட்டை, கனவு அட்டை மற்றும் தொப்பிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு இணைய பயன்பாட்டிற்காக SIM கார்டு வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு முறை செல்வர். முதல் முறை வீட்டிற்கு செல்லும் போது விண்ணப்ப படிவத்தினை குடும்பத் தலைவர் / உறுப்பினரிடம் வழங்குவர். அவ்விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு திட்டங்களின் பெயர் பட்டியல் விவரங்களை அவர்களிடம் தெரிவித்து, படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி கோருவர். தன்னார்வலர்கள், இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சரிபார்த்து கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வர். கைபேசி செயலியில் பதிவேற்றியப் பின்னர் அக்குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையினை வழங்குவர்.

இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கருத்தை வலுப்படுத்தும் விதமாக அவருக்கு என்றென்றும் ஆதரவு அளிக்க வேண்டும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப, அவர்கள், பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி முதல்வர் திரு.ரகுராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.