மூடு

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் “சமத்துவப் பொங்கல்” திருவிழா.

வெளியிடப்பட்ட தேதி : 14/01/2026

செ.வெ.எண்:-33/2026

நாள்:-13.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் “சமத்துவப் பொங்கல்” திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள்
தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் “சமத்துவப் பொங்கல்” திருவிழா இன்று (13.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

இயற்கைக்கும், சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அனைத்துத் தொழில்களுக்கும் அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாக தமிழர்களால் இத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் 12.01.2026 மற்றும் 13.01.2026 ஆகிய இரண்டு நாட்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான கிரக்கெட், குண்டு எறிதல், கயிறு இழுத்தல், வாயில் தேக்கரண்டியுடன் எலுமிச்சை (Lemon and Spoon), பொங்கல் வைத்தல், கயிறு தாண்டுதல் (Skipping), ஓட்டப்பந்தயம், சோடா பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், பண் சாப்பிடுதல், இளவட்டக்கல், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், நமது பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், பாரம்பரிய கலைகளையும் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இன்றைய தினம் பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவினை மேலும், சிறப்பிக்கும் வகையில் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த பெண்கள் “சமத்துவப் பொங்கல்” வைத்து கொண்டாடி வருகின்றனர். சமூகத்தில் அனைவரும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டு இத்திருவிழாவை சிறப்பித்து வருகின்றனர்.

மேலும், விவசாயத்திற்கு உழைத்த மாடுகளை கொண்டாடும் வகையில் மாட்டுப்பொங்கல் திருவிழா வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே, உழவுத் தொழிலுக்கு அச்சாணியாக விளங்கி வரும் காளை மாடுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வரவைத்து சிறப்பு சேர்க்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முன்னெடுப்புடன் அனைத்துத்துறை அலுவலர்களும் செயலாற்றி வருகின்றனர். அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியினை தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்-2026-ஐ தொடர்ந்து மேற்கொள்வேன் என்று அனைத்துத்துறை அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், பொங்கல் பொங்குவது போல உங்கள் குடும்பத்திலும் மகிழ்ச்சிகள் பொங்க அனைவருக்கும் எனது இனிய பொங்கள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்-2026-ஐ முன்னிட்டு அரசு அலுவலர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் மரு.பி.சாமிநாதன், இ.கா.ப., அவர்கள், திண்டுக்கல் மண்டல வனப்பாதுகாவலர் திரு.பு.முகமது ஷபாப், இ.வ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரதீப், இ.கா.ப., அவர்கள், மாவட்ட வன அலுவலர் திரு.நாக சதீஷ் கிடிஜாலா, இ.வ.ப., அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., அவர்கள், உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) செல்வி.நேகா, இ.கா.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா மணி அவர்கள் ஆகியோர் உட்பட அனைத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.