மூடு

Coffee with Collector – அறிவியல் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி.

வெளியிடப்பட்ட தேதி : 20/01/2026

செ.வெ.எண்:-50/2026

நாள்:-19.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

‘Coffee with Collector’ – அறிவியல் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 13.01.2026 வரை 24 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 385 மாணவ/மாணவியர், அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ/மாணவியர் 27 பேர், தலைமையாசிரியர்/ஆசிரியர்கள் 30 பேர், மருத்துவர்கள்/செவிலியர்கள் 25 பேர், விவசாயிகள் 37 பேர், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் 26 பேர், கொடைக்கானல் ஒன்றியத்தைச் சார்ந்த திறன் வளர்ப்புப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட 25 பழங்குடியின இளைஞர்கள், சமூக ஊடகவியலாளர்கள் 68 பேர் மற்றும் பிறதுறைகளைச் சார்ந்த 50 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இருபத்து ஐந்தாவது நிகழ்வாக அறிவியல் ஆசிரியர்கள் 25 பேருடன் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது:

அறிவியல் விழிப்புணர்வையும், அறிவியல் அணுகுமுறைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் அறிவியல் அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான ‘அறிவியல் திருவிழா 2026’ திண்டுக்கல் எம்.எஸ்.பி.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 28.01.2026 முதல் 03.02.2026 வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது. அறிவியல் திருவிழாவில் 120 அரங்குகள், பள்ளி மாணவ-மாணவியரின் 240 அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

மேலும், இஸ்ரோவிலிருந்து நடமாடும் விண்வெளி கண்காட்சி பேருந்து திருவிழா நடைபெறும் மைதானத்தில் அனைவரின் பார்வைக்கும் காட்சிப்படுத்த வரவழைக்கப்படவுள்ளது. தென்தமிழகத்திற்கு இப்பேருந்து வருவது இதுவே முதன்முறையாகும். இந்திய விண்வெளி மையத்தின் செயற்கைக்கோள்கள், கண்டுபிடிப்புகள், விண்வெளி திட்டங்கள், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட் ஏவும் காட்சிகள், சந்திராயன் திட்ட மாதிரிகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இத்துடன் அறிவியல் திருவிழாவின் ஒரு அங்கமாக நேரடி அறிவியல் செயல்விளக்க முகாமும் நடைபெறவுள்ளது. மாணவ-மாணவியர்கள், இளைஞர்கள் பொதுமக்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டுவதே இத்திருவிழாவின் முக்கிய நோக்கமாகும். அறிவியல் திருவிழா நடைபெறும் 7 நாட்களில் 1 இலட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் அறிவியல் திருவிழாவிற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திருவிழாவில் மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களை அதிகளவில் கலந்துகொள்ள செய்து பயன்பெற ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொண்டார். அதோடு, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் தொடர்பான படைப்புகளும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. விஞ்ஞானிகள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் அறிவியல் உரைகள் நிகழ்த்த உள்ளார்கள்.தொடர்ந்து, இந்த அறிவியல் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 24.01.2026 (சனிக்கிழமை)-அன்று அறிவியல் மாரத்தான் போட்டி நடத்தப்படவுள்ளது. இப்போட்டியில், ஏழாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ/மாணவியர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பள்ளிப் பிரிவிலும், கல்லூரி மாணாக்கர்கள், பொதுமக்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பொதுப் பிரிவிலும் பங்கேற்கலாம். இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் நபர்களுக்கு பரிசுத்தொகைஇ பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்படும். மேலும், இந்த அறிவியல் மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் டி-ஷர்ட்டுகள் மற்றும் தொப்பிகள் வழங்கப்படவுள்ளன. மேலும், அறிவியல் திருவிழா நடைபெறும் நாட்களில் அறிவியல் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., அவர்கள்இ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா மணி அவர்கள்,மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் (கல்வி) திரு.அ.சரவணக்குமார் அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.