“நிற்காமல் ஓடுவோம், நிலவைத் தொடுவோம்!”- அறிவியல் மாரத்தான் போட்டி.
செ.வெ.எண்: 70/2026
நாள்: 24.01.2026
திண்டுக்கல் மாவட்டம் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’-வை முன்னிட்டு நடைபெற்ற “நிற்காமல் ஓடுவோம், நிலவைத் தொடுவோம்!”
அறிவியல் மாரத்தான் போட்டியினை
மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’-வை முன்னிட்டு நடைபெற்ற “நிற்காமல் ஓடுவோம், நிலவைத் தொடுவோம்!” அறிவியல் மாரத்தான் போட்டியினை இன்று (24.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளில் சொல்வது போல மாணவர்களின் எதிர்காலம் மிகவும் முக்கியமானதாகும். அதனடிப்படையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்த விளங்க வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அதன்படி, மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் விளையாட்டு மேம்பாட்டுத் துறையினை தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் கிராமப்புற மாணவ, மாணவியர்களும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தங்களது வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு செயலாற்றி வருகிறார். அதன்படி, விளையாட்டுத் துறையின் மூலம் பல்வேறு விளையாட்டு உபகரணங்களை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். மேலும், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதில்லை. இப்போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு அதில் சிறந்த விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று வருகின்றனர்.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு அறிவியல் மீது ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் வருகின்ற 28.01.2026 முதல் 03.02.2026 வரை 7 நாட்கள் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அறிவியல் திருவிழாவில் பள்ளிகளைச் சேர்ந்த 40 ஆயிரம் மாணவர்களும், கல்லூரிகளைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களும், 30 ஆயிரம் பொதுமக்களும் என மொத்தம் 1 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து, அறிவியல் திருவிழாவில் 120 அரங்குகள், பள்ளி மாணவ-மாணவியரின் 240 அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இஸ்ரோவிலிருந்து நடமாடும் விண்வெளி கண்காட்சி பேருந்து திருவிழா நடைபெறும் மைதானத்தில் அனைவரின் பார்வைக்கும் காட்சிப்படுத்த வரவழைக்கப்படவுள்ளது. தென்தமிழகத்திற்கு இப்பேருந்து வருவது இதுவே முதன்முறையாகும். இந்திய விண்வெளி மையத்தின் செயற்கைக்கோள்கள், கண்டுபிடிப்புகள், விண்வெளி திட்டங்கள், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட் ஏவும் காட்சிகள், சந்திராயன் திட்ட மாதிரிகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இத்துடன் அறிவியல் திருவிழாவின் ஒரு அங்கமாக நேரடி அறிவியல் செயல்விளக்க முகாமும் நடைபெறவுள்ளது. அதோடு, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் தொடர்பான படைப்புகளும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. விஞ்ஞானிகள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் அறிவியல் உரைகள் நிகழ்த்த உள்ளார்கள். மாணவ-மாணவியர்கள், இளைஞர்கள், பொதுமக்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டுவதே இத்திருவிழாவின் முக்கிய நோக்கமாகும்.
அதன்படி, அறிவியல் திருவிழாவின் முதல்படியாக இன்றைய தினம் அறிவியல் மாரத்தான் போட்டி சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இந்த மாரத்தான் போட்டியானது திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்தப்படும் 2-வது மாரத்தான் போட்டியாகும். கடந்த 23.08.2025-அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் 12-வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு “வாருங்கள் ஓடுவோம், வாசிப்பை நோக்கி” என்ற குறிக்கோளுடன் விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்பட்டது.
மேலும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல்இ தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்வே, வருகின்ற 28.01.2026 முதல் 03.02.2026 வரை 7 நாட்கள் நடைபெறும் இந்த அறிவியல் திருவிழாவில் அதிகளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சுற்றுலாவிற்கு அழைத்து செல்வதைப் போன்று இந்த அறிவியல் திருவிழாவிற்கு அழைத்து வந்தால் அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும்.
தற்போது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் செல்போன் பயன்பாட்டினால் அதிகளவில் நேரத்தை வீணாக்கி வருகின்றனர். எனவே, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் நலனை கருத்திற்கொண்டு இந்த அறிவியல் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பலர் கணிதம்இ அறிவியல் பாடப்பிரிவுகளில் நாட்டமின்றி இருப்பர். அதனை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த அறிவியல் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை இந்த அறிவியல் திருவிழாவில் பங்கேற்க செய்து அவர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் வழிவகை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, இன்றைய தினம் நடைபெற்ற அறிவியல் மாரத்தான் போட்டியானது ஆண்கள் பிரிவில் கலந்து கொண்டவர்கள் எம்.எஸ்.பி.அரங்கத்தில் தொடங்கி எஸ்.எம்.பி.எம்.பள்ளி, பெரியார் சிலை, நியூ பார்வதி டெக்ஸ், எம்.வி.எம்.கல்லூரி, ஈஸ்வரி ஸ்டோர், வி.சி.மஹால் (இடது புறம்) வழியாக சென்று எம்.எஸ்.பி.அரங்கத்திலும், பெண்கள் பிரிவில் கலந்து கொண்டவர்கள் எம்.எஸ்.பி.அரங்கத்தில் தொடங்கி எஸ்.எம்.பி.எம்.பள்ளி, திண்டுக்கல் ஸ்கேன், பெரியார் சிலை, மணிக்குண்டு (திரும்புதல்), அண்ணா சிலை, பழைய நீதிமன்றம், ஒய்.எம்.ஆர்.பட்டி வழியாக சென்று எம்.எஸ்.பி.அரங்கத்திலும் வந்து சேர்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஏழாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ/மாணவியர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பள்ளிப் பிரிவிலும், கல்லூரி மாணாக்கர்கள், பொதுமக்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பொதுப் பிரிவிலும் நடத்தப்பட்ட இந்த அறிவியல் மாரத்தான் போட்டியில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ்கள் மாவட்ட ஆடசித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில், காவல்துறை துணைத் தலைவர் (திண்டுக்கல் சரகம்) திரு.பெ.சாமிநாதன், இ.கா.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் (கல்வி) திரு.அ.சரவணக்குமார், திட்ட இயக்குநர் பேரா.ரெ.மனோகரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெ.தினகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.சிவா அவர்கள் ஆகியோர் உட்பட பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

