விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
செ.வெ.எண்: 86/2026
நாள்: 30.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் இன்று (30.01.2026) நடைபெற்றது.
இன்றையக் கூட்டத்தில், பழனி வட்டாரம் புதூர் பகுதியில் விதிகளை மீறி அமைத்த செங்கல் சூளையை அகற்றுவதற்கு பல்வேறு கூட்டங்களில் நடவடிக்கை மேற்கொள்ள கூறியும் நடவடிக்கை மேற்கொள்ளாததது குறித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவின் படி செங்கல் சூளையை மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார். செங்கல் சூளையை மூட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஊர் பொது பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் கோரிக்கை வைத்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் கனிம வளத்துறை, பழனி வட்டாட்சியர், பழனி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அவர்களை இன்றே ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்திட வேண்டுமென்று தெரிவித்தார்கள்.
ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ரா.பி.ராஜேந்திரன் என்பவர் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் பன்றி, மயில் மற்றும் காட்டுமாட்டினால் தொந்தரவு அதிகமாக ஏற்படுகிறது. அதனால் பயிர்களுக்கு இழப்பீடு அதிகமாக ஏற்பட்டுள்ளது. வனத்துறை எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்ததால் விவசாயிகள் தங்கள் நிலங்களைச் சுற்றி மின்சார வேலிகளை அமைத்தனர். இதனால் மனித உயிர்களுக்கு ஆபத்தான சூழ்நிலையும் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து உடனடியாக வனத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.
வனச்சர அலுவலர் அவர்கள் இரண்டு நபர்களுக்கு அனுமதியின்றி மின்சார தொங்கும் வேலி அமைத்தற்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தோம் என்று தெரிவித்தார்கள். தும்மலப்பட்டியைச் சேர்ந்த செல்லம் என்ற விவசாயி விருவீடு பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மஞ்சளாறு அணையிலிருந்து தங்கள் பகுதிக்கு தண்ணீர் வழங்கிட வேண்டுமென்றும் மஞ்சளாறு அணையின் உயரத்தினை 150 அடியாக உயர்த்தி கட்டித்தர வேண்டுமென்றும் தெரிவத்தார்.
கோபால் என்பவர் வத்தலக்குண்டு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்தார்.
சத்திரபட்டியைச் சேர்ந்த அழசியண்ணன் என்ற விவசாயி தேசிய நெடுஞ்சாலையில் பேவர் பிளாக் கல் அமைப்பதற்கு மண் அமைக்கப்பட்டு வேலை முடிவு பெறாமல் இருப்பதால் காய்கறி பயிர்களை கொண்டு செல்வதற்கு சிரம்மான சூழ்நிலை ஏற்படுகிறது. விரைந்து கற்களை பதித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் 89 மனுக்கள் அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:-
விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றவதற்காகவும், அவர்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண்பதற்காகவும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாத்திற்கு 64 மனுக்கள் பெறப்பட்டதில் 50 மனுக்களுக்கு பதில் விபரம் பெறப்பட்டு 14 மனுக்கள் நிலுவையில் உள்ளன. ஜனவரி மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 89 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் பாலாறு பொருந்தலாறு அணை (மொத்த உயரம் 65 அடி) நீர்மட்டம் 47.61 அடி, பரப்பலாறு அணை (மொத்த உயரம் 90 அடி) நீர்மட்டம் 73.93 அடி, வரதமாநதி அணை (மொத்த உயரம் 66.47 அடி) நீர்மட்டம் 62.44 அடி, குதிரையாறு அணை (மொத்த உயரம் 79.99 அடி) நீர்மட்டம் 71.27 அடி, குடகனாறு அணை (மொத்த உயரம் 27.07 அடி) நீர்மட்டம் 18.18 அடி, நங்காஞ்சியாறு அணை (மொத்த உயரம் 39.37 அடி) நீர்மட்டம் 22.57 அடி என்ற அளவில் நீர்மட்டம் உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில், 2025-ஆம் ஆண்டு குளிர் பருவகாலமான ஜனவரி முதல் பிப்ரவரி வரை சராசரியாக 36.12 மி.மீ மழையளவும், கோடை பருவகாலமான மார்ச் முதல் மே வரை சராசரியாக 182.75 மி.மீ மழையளவும், தென்மேற்கு பருவகாலமான ஜுன் முதல் செப்டம்பர் வரை சராசரியாக 118.62 மி.மீ மழையளவும் பொழிந்துள்ளது. வடகிழக்கு பருவகாலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரை 334.51 மி.மீ மழையளவு பொழிந்துள்ளது. மேலும், ஜனவரி-2026-ஆம் மாதத்தில் சராசரியாக 33.9 மி.மீ மழையளவு பெய்ய வேண்டும். ஆனால், தற்போது வரை (27.01.2026) 35.2 மி.மீ மழையளவு பொழிந்துள்ளது. எனவே, ஜனவரி-2026-ஆம் மாதத்தில் இயல்பான மழையளவைக் காட்டிலும் அதிகமான மழையளவு பொழிந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 01.04.2025 முதல் 27.01.2026 வரை யூரியா உரம் விநியோகம் 12,984 மெ.டன், இருப்பு 2,120 மெ.டன், டிஏபி விநியோகம் 2,815 மெ.டன், இருப்பு 1,640 மெ.டன், பொட்டாஷ் விநியோகம் 3,410 மெ.டன், இருப்பு 1,010 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் விநியோகம் 1,318 மெ.டன், இருப்பு 710 மெ.டன், காம்ப்ளக்ஸ் விநியோகம் 7,650 மெ.டன், இருப்பு 4,435 மெ.டன், அம்மோனியம் சல்பேட் மற்றும் அம்மோனியம் குளோரைடு விநியோகம் 910 மெ.டன், இருப்பு 310 மெ.டன், கலப்பு உரங்கள் விநியோகம் 1,615 மெ.டன், இருப்பு 160 மெ.டன் என மொத்தம் 30,702 மெ.டன் உரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 10,385 மெ.டன் உரம் இருப்பு உள்ளன. அதேபோல், விதை உள்ளிட்ட இடுபொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன. எனவே, விவசாயிகள் அரசின் மூலம் வழங்கப்பட்டு வரும் உரங்களை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக, மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
”இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை, மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன்” என மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா மணி அவர்கள் வாசிக்க அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.
இக்கூட்டத்தில், இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) திரு.கோவிந்தராசு, துணை இயக்குநர்(தோட்டக்கலைத்துறை) திருமதி காயத்ரி, துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) திருமதி உமா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.ர.கீர்த்தனா மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.நாகேந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) திரு.பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்துறை) திரு.குமரவேல் ஆகியோர் உட்பட துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.