மூடு

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

வெளியிடப்பட்ட தேதி : 06/02/2026
.

செ.வெ.எண்:-14/2026

நாள்:-06.02.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள்
தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (06.02.2026) நடைபெற்றது.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களின் நிலுவையிலுள்ள ஓய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவது தொடர்பான கோரிக்கைகளை பரிசீலனை செய்யும் பொருட்டு, ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்கங்கள் கலந்து கொண்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள் குறைந்தது 20 அல்லது 30 ஆண்டுகள் அந்தந்த துறைகளில் பணியாற்றி இருப்பர். அரசுப் பணியாளர்கள் தாம் பணியாற்றிய காலத்தை அரசுக்காகவும், பொதுமக்களுக்காகவும் முழுமையாக அர்ப்பணித்துள்ளனர். எனவே, அவர்கள் ஓய்வு பெறும் நாளினை எவ்வாறு சிறப்பாக கொண்டாடுகின்றமோ, அதேபோல் பணியாளர்கள் ஓய்வு பெறும் மாதத்திற்கு முன்னதாகவே அவர்களுக்கு அரசின் மூலம் கிடைக்க வேண்டிய அனைத்து பலன்களையும் பெற்று தருவதற்கான பணிகளை தொடங்கிட வேண்டும். அரசுப் பணியாளர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற 1 மாத காலத்திற்குள் அரசின் மூலம் கிடைக்க வேண்டிய அனைத்து பலன்களையும் கிடைக்க செய்வதற்கு அந்தந்த துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.  .

இனிவரும் காலங்களில் நடைபெறும் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கவில்லை என்று ஓய்வூதியதாரர்களிடமிருந்து மனுக்கள் வராமல் இருப்பதற்கான நிலையினை உருவாக்கிட வேண்டும். குறைகளை கூறும் கூட்டமாக இல்லாமல், குறைகளை தீர்க்கும் கூட்டமாக இது அமைய வேண்டும். ஒவ்வொரு அலுவலரும் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி ஓய்வூதியதாரர்களுக்கு உதவிகளை செய்திட வேண்டும்.

மேலும், ஓய்வூதியதாரர்களின் நியாயமான, தகுதியான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட வேண்டும். காப்பீட்டுத்திட்ட மருத்துவ செலவின தொகை பெறுவது தொடர்பான விண்ணப்பங்கள், கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், கருவூலம் மற்றும் கணக்குத்துறை மண்டல இணை இயக்குநர் (மதுரை) திரு.கோபால், மாவட்ட கருவூலர் திரு.ஆர்.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குத்துறை) திருமதி.ஜெ.அமலா சாந்தமேரி அவர்கள் ஆகியோர் உட்பட ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.