12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார்.
செ.வெ.எண்: 61/2026
நாள்: 23.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள 21,419 மாணவ, மாணவிகளுடன் காணொலிக்காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கலந்துரையாடினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 21,419 மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று (23.02.2026) கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடலின்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக் கல்வித் துறை சார்ந்து பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். நிதிநிலை அறிக்கையிலும் ஒவ்வொரு முறையும் பள்ளிக் கல்வித் துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்வது மட்டுமின்றி மாணவ/மாணவியரின் நலன் சார்ந்து புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வித் துறை உச்சம் தொட்டு வருகிறது. வருகின்ற 02.03.2026-அன்று 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளது. இத்தேர்வினை எழுதவுள்ள உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள், பாராட்டுகள்.
கடந்த ஆண்டில் திண்டுக்கல் மாவட்டம் பெற்ற தேர்ச்சி சதவீதத்தை விட இந்த ஆண்டு சிறப்பான தேர்ச்சி சதவீதம் பெற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். இதற்காகவே நடப்பு கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்தே பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், கற்றல்-கற்பித்தல் திறம்பட நடைபெறும் பொருட்டு தலைமையாசிரியர்கள்/ஆசிரியர்களுக்கான கூட்டம் நடத்துதல், மாணவ,மாணவியருக்கான குறைந்தபட்ச கற்றல் கையேடு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய முன்னெடுப்புகளால் 2024-2025-ஆம் ஆண்டில் 82மூ ஆக இருந்த உயர்கல்வி சேர்க்கை சதவீதம் 2025-2026-ஆம் ஆண்டில் 99% ஆக உயர்ந்துள்ளது. இதற்கு தலைமையாசிரியர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களின் பங்களிப்பு மகத்தானது. கல்வி மீது கவனத்தை குவிக்க வேண்டிய காலத்தில், கல்வி மீதே உங்கள் முழு கவனமும் இருக்க வேண்டும். மதிப்பெண்கள் பற்றி கவலை கொள்ள வேண்டாம், ஆனால், கற்பதற்கு தயங்க கூடாது. சிறப்பான கற்றலுக்கான திறன் உங்களுக்குள் பொதிந்துள்ளது என்பதனை உணர வேண்டும்.
தேர்விற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பயமோ, பதட்டமோ இன்றி இயல்பான மனநிலையில் தேர்விற்குத் தயாராக வேண்டும். இதுவரை முழுமையாக படிக்காமல் இருந்தாலும், இன்றிலிருந்து நேரத்தை வீணாக்காமல் படித்தால்கூட சிறப்பான மதிப்பெண்கள் முடியும். அனைத்து பாடங்களையும் அவசியம் திருப்புதல் செய்தல் வேண்டும். தலைமையாசிரியர்கள்/ஆசிரியர்கள் மேற்பார்வையில் பள்ளிக்குச் சென்று குழுவாக இணைந்து படிப்பது சிறந்த பலன்களை வழங்கும். இதனை தலைமையாசிரியர்கள்/ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்.

முதலாவதாக, மாணவ, மாணவிகள் முழு நம்பிக்கையுடனும், அர்ப்பணிப்புடனும் படிக்க வேண்டும். உடல் நலனில் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும். கோடைகாலம் துவங்க உள்ளதால் காய்ச்சல், அம்மை உள்ளிட்ட பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த உணவுப்பொருட்களை போதிய அளவு எடுத்துக்கொள்வதோடு, சுகாதாரமான குடிநீரும் பருக வேண்டும். இரவு நெடுநேரம் விழுத்திருந்து படிப்பதை தவிர்க்க வேண்டும். கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய பாடங்களுக்கு ஆசிரியர் உதவியுடன் சிறப்புப் பயிற்சிகளும், திருப்புதலும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, அனைவரும் பொதுத்தேர்வு அன்று விடுப்பு ஏதும் எடுக்காமல், பொதுத்தேர்வு வாய்ப்பை நழுவ விடாமல் அவசியம் பங்கேற்க வேண்டும். அவரவர் நண்பர்களும் தேர்வுக்கு வருகை புரிவதை உறுதி செய்தல் வேண்டும். இதன் பொருட்டு பள்ளிக் கல்வித்துறையும், ஆசிரியர்களும் எப்போதும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். தேவையான நம்பிக்கையையும், ஊக்கத்தையும் வழங்குவர்.
மூன்றாவதாக, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களின் முழு பலனையும் மாணவ, மாணவிகள் பெற்றுக் கொள்ள வேண்டும். உயர்கல்வி கற்பது குறித்தான கவலை ஏதும் வேண்டாம். மாவட்ட நிர்வாகம் இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அனைவரும் 100% உயர் கல்வி பெறுவதை உறுதி செய்வதே மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய பணியாகும். தேர்வு காலஅட்டவணை குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். எழுதி முடித்த தேர்வுகள் பற்றி தேவையற்ற கவலை கொள்ளாமல் அடுத்த தேர்விற்கு உற்சாகமுடன் தயாராக வேண்டும். மாவட்ட நிர்வாகம் நீங்கள் அனைவரும் சிறப்பான மதிப்பெண்களுடன் 100% தேர்ச்சி பெறுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பில் உள்ளது.
கலந்துரையாடலின்போது, மாணவ, மாணவிகள் தேர்வு பயத்தை போக்கும் வழிமுறைகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது எப்படி, ஜே.இ.இ., நீட்(NEET) உள்ளிட்ட உயர்கல்வி வாய்ப்புகள், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு, சி.ஏ., படித்தல், ஐடி துறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் விளக்கங்கள் கேட்டு தெளிவு பெற்றனர்.
இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., காவல் உதவி கண்காணிப்பாளர் (பயிற்சி) செல்வி.கா.நேஹா, இ.கா.ப., முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ப.உஷா அவர்கள் ஆகியோர் மாணவ/மாணவியருக்கு கூடுதல் ஆலோசனைகள் வழங்கி வாழ்த்திப் பேசினர். அந்தந்த பள்ளிகளில் இருந்தவாறு கல்வித்துறை அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் காணொலிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்இ திண்டுக்கல்.