பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை.
செ.வெ.எண்:-24/2026
நாள்:-06.03.2026
திண்டுக்கல் மாவட்டம்
மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய 3 மாதங்களுக்கு பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆப., அவர்கள் தகவல்
டிடி 160 திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) சார்பில் 165 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் உற்பத்தியாளர்களிடமிருந்து தினமும் 75000 லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகின்றது. தற்பொழுது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் மற்றும் கன்று பிறப்பு காலம் ஆகியவற்றின் காரணமாக பால் உற்பத்தியில் சிறிய அளவில் குறைவு ஏற்படும். இதனால் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் நிதி இழப்பினை ஈடுகட்டவும் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கூட்டுறவு சங்கத்தில் பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலில் எவ்வித குறைவும் ஏற்படாமல் பால் கொள்முதல் ஓரே சீராக பராமரித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கும் பாலிற்கு ஒன்றிய சொந்த நிதியிலிருந்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.1 கூடுதலாக ஊக்கத் தொகையாகவும் மார்ச்-2026 ஏப்ரல்-2026 மற்றும் மே-2026 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதன்படி உற்பத்தியாளர்கள் பிரதம சங்கத்திற்கு வழங்கும் பாலிற்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளவாறு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் பால் லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகையோடு மேலும் ரூ.1 சேர்த்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.4 ஊக்கத் தொகையாக 3 மாதங்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.