எச்.பி.வி தடுப்பூசி வழங்கும் முகாம்.
செ.வெ.எண்:-27/2026
நாள்:-06.03.2026
திண்டுக்கல் மாவட்டம்
பழனி சாலையில் அமைந்துள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 14-15 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு எச்.பி.வி தடுப்பூசி வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி சாலையில் அமைந்துள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 14-15 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு எச்.பி.வி தடுப்பூசி வழங்கும் முகாமினை இன்று (06.03.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, மருத்துவத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பல்வேறு துறைகள் இருந்தாலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ”பள்ளிக்கல்வித் துறை” மற்றும் ”மருத்துவத்துறை” இரண்டு துறைகளும் இரண்டு கண்கள் ஆகும்.
திமிழ்நாட்டில் ஆறு நோய்களை தடுப்பதற்கான விரிவுபடுத்தப்பட்ட தடுப்பூசி திட்டம் 1978-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக நாடு தழுவிய தடுப்பூசி திட்டம் 1985-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த தடுப்பூசி திட்டத்தின் கீழ், 11 வகையான தடுப்பூசிகளை கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் அளித்து அவர்களை 12 வகையான (காசநோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், மஞ்சள் காமாலை, H இன்புளுயன்சா –நிமோனியா மெனிஞ்ஜிட்டில், இரணஜன்னி, போலியோ தட்டம்மை, ரூபல்லா, ரோட்டா வைரஸ், வயிற்றுபோக்கு, நிமோ காக்கல் நிமோனியா மற்றும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (தொற்றுநோய் பரவக்கூடிய அபாயம் உள்ள மாவட்டங்கள்)) நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் 1.2 இலட்சம் கர்ப்பபை வாய் புற்றுநோய் புதிதாக கண்டறியப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய் 28%-மும், கர்ப்பபைவாய் புற்றுநோய் 14%-மும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் கர்ப்பபைவாய் புற்றுநோயினை தடுக்க 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு எச்.பி.வி.தடுப்பூசி வழங்கும் திட்டத்தை 4 மாவட்டங்களுக்கு கடந்த 27.01.2026-அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்த 28.02.2026-அன்று முதல் அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்களில் மருத்துவர்களின் கண்காணிப்பில் 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு எச்.பி.வி தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டதைத் தொடர்ந்து எச்.பி.வி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 14 வயதில் 14,204 பெண் குழந்தைகள் உள்ளனர். பெற்றோர்கள், பாதுகாவலர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் பெண் குழந்தைகளை அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்களுக்கு அழைத்து வந்து சர்வதேச தரத்தினைக் கொண்ட எச்.பி.வி (HPV-Human Papilloma Virus) தடுப்பூசி செலுத்திக்கொண்டு கர்ப்பபைவாய் புற்றுநோயிலிருந்து குழந்தைகளை பாதுகாத்துக்கொள்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். எனவே, 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு எச்.பி.வி (HPV-Human Papilloma Virus) தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கர்ப்பபைவாய் புற்றுநோயினை 99.7% தடுக்க இயலும்.
மேலும், கர்ப்பபைவாய் புற்றுநோயினை தடுக்கும் எச்.பி.வி (HPV-Human Papilloma Virus) தடுப்பூசியை பெண்குழந்தைகளுக்கு 14-15 வயதிற்குள் செலுத்திக்கொள்ள வேண்டும். 14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கோ, 15 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கோ செலுத்த இயலாது. இதனை கருத்திற்கொண்டு பெற்றோர்கள், பாதுகாவலர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் பெண் குழந்தைகளுக்கு உடனடியாக கர்ப்பபைவாய் புற்றுநோயினை தடுக்கும் எச்.பி.வி (HPV-Human Papilloma Virus) தடுப்பூசியை செலுத்திகொள்ள வேண்டும். மேலும், பள்ளிகளில் பயிலும் 14-15 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு கர்ப்பபைவாய் புற்றுநோயினை தடுக்கும் எச்.பி.வி தடுப்பூசி செலுத்துவதற்கு அந்தந்த பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர் பெருமக்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இம்முகாமில், நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய (பழனி சாலை) மருத்துவர் மரு.முஹம்மது பாசில், மாநகர் நல அலுவலர் மரு.ராம்குமார், மாவட்ட தாய்சேய் நல அலுவலர் திருமதி.உமா மகேஸ்வரி அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.