மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் ரூ.41.00 இலட்சம் மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, ரூ.52.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்
செ.வெ.எண்: 45/2026
நாள்: 13.03.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, அகரம் பேரூராட்சி மற்றும் தாடிக்கொம்பு பேரூராட்சிகளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.41.00 இலட்சம் மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து ரூ.52.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, அகரம் பேரூராட்சி மற்றும் தாடிக்கொம்பு பேரூராட்சிகளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.41.00 இலட்சம் மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து மற்றும் ரூ.52.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை இன்று (02.03.2026) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது :-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டத்தை தொடங்கிவைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, தமிழ்நாட்டில் இதுவரை 21.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 72078 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 3256 புதிய பகுதி நேர மற்றும் முழு நேர நியாய விலைக்கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. 2 இலட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் 1,500 ரேசன் அட்டைகளுக்கு ஒரு நியாய விலைக்கடை என்ற விகிதத்தில் நியாய விலைக்கடைகள் இருந்தன. தொடர்ந்து, மாண்புமிகு முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 100 ரேசன் அட்டைகளுக்கு ஒரு நியாய விலைக் கடையினை உருவாக்கி வருகிறார்கள். இதுவரை ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 60 பகுதி நேர நியாய விலைக் கடைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 1.30 கோடி மகளிர் மாதம் ரூ.1000 பெற்று பயனடைந்து வருகின்றனர். இரண்டாம் கட்டமாக 17 இலட்சம் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 4 இலட்சத்து 62 ஆயிரம் நபர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் மகளிர் உரிமைத்தொகை பெறும் மகளிர் வங்கிக் கணக்கில் ரூபாய் 5,000 பற்று வைக்கப்பட்டது. இதனால் மகளிர் உரிமைத்தொகை பெறும் அனைத்து பெண்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். மகளிர் உரிமைத் தொகையினை ரூபாய் 1,000-லிருந்து ரூபாய் 2,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பதே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கமாகும். மேலும், மகளிர் உரிமைத்தொகை பெறாத பெண்கள் ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களில் விண்ணபித்ததற்கான இரசீது வைத்திருந்தால் அவற்றை வைத்து மீண்டும் மகளிர் உரிமைத்தொகை வேண்டி விண்ணப்பிக்கலாம். எனவே, விடுபட்டவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த 04.02.2026-அன்று ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 9,809 பயனாளிகளுக்கு ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் மூத்த குடிமக்களுக்கான முதியோர் உதவித்தொகை மற்றும் ஏனைய சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை வழங்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தென்காசியில் 29.10.2025-அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மேலும் தமிழ்நாட்டில் 1 இலட்சம் கலைஞரின் கனவு இல்லம் வீடுகள் கட்டுவதற்கு நிதியொதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தகுதியான நபர்கள் அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழியில், திண்டுக்கல் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் (07.05.2021) முதல் தற்போது வரை திண்டுக்கல் மாவட்டத்தை சேந்த 1,32,501 பயனாளிகளுக்கு ரூ.107.57 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், ஆத்துார் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 8,887 பயனாளிகளுக்கு ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, நேற்றை தினம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 250 பயனாளிகளுக்கும் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 355 பயனாளிகளுக்கு என மொத்தம் 605 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இலவச வீட்டுமனைப் பட்டாக்கள பெற்ற 100 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மீதமுள்ள பயனாளிகளுக்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். எனவே, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார். தொடர்ந்து, இன்றைய தினம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்ட பூதிபுரத்தில் ரூ.08.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடக மேடையினையும், இன்னாசிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பகுதி நேர நியாய விலைக் கடையினையும், மறவபட்டியில் ரூ.13.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையினையும், அழகுசமுத்திரம்பட்டியில் ரூ.18.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தையும் மற்றும் அகரம் பேரூராட்சிக்குட்பட்ட அச்சாம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பகுதி நேர நியாய விலைக் கடையினையும், சத்திரப்பட்டியில் ரூ.13.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையினையும், கிரியாம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பகுதி நேர நியாய விலைக் கடையினையும் என மொத்தம் ரூ.52.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்ட மறவபட்டி புனித குழந்தையேசு உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.41.00 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.சுல்தான் சிக்கந்தர், கூட்டுறவு சங்கம் துணைப்பதிவாளர் (திண்டுக்கல் சரகம்) திரு.கௌதம் கார்த்தி, அகரம் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி.பானு ஜெயராணி அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.