மூடு

அரசின் நலத்திட்டங்களை பளியர் இன மக்கள் பெற்றிடும் வகையில் பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து சிறப்பு முகாம் நடத்தப்பட்டது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 02/07/2024
.

செ.வெ.எண்:-52/2024

நாள்:-24.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

அரசின் நலத்திட்டங்களை பளியர் இன மக்கள் பெற்றிடும் வகையில் பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து சிறப்பு முகாம் நடத்தப்பட்டது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

அரசின் நலத்திட்டங்களை பளியர் இன மக்கள் பெற்றிடும் வகையில் பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து 28 கிராமங்களுக்கு நேரடியாக சென்று தரவுகள் சேகரிக்கும் சிறப்பு முகாம் இன்று(24.06.2024) நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் 4 கிராமங்களில் 42 குடும்பங்களும், திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் 6 கிராமத்தில் 39 குடும்பங்களும், ஆத்தூர் வட்டத்தில் 1 கிராமத்தில் 2 குடும்பங்களும், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் 2 கிராமத்தில் 90 குடும்பங்களும், பழனி வட்டத்தில் 8 கிராமத்தில் 216 குடும்பங்களும், கொடைக்கானல் வட்டத்தில் 33 கிராமத்தில் 931 குடும்பங்களும் என மொத்தம் 1320 குடும்பங்களை சார்ந்தவர்கள் வசிக்கின்றனர்.

தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் அனைத்தையும், பளியர் இன மக்கள் இல்லங்களுக்கே சென்று வழங்கிடும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அவர்களின் தேவைகள் குறித்த தரவுகளை சேகரிக்க சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

வருவாய் துறையின் சார்பில் வழங்கப்படும் ஜாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, பட்டா மாறுதல் ஆணை, பிறப்பு இறப்பு சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதியோர் ஓய்வூதியம், பிற ஓய்வூதியம் வழங்கும் திட்டங்கள் போன்றவைகள் உடனுக்குடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மின் விளக்குகள், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு, தனி நபர் மற்றும் சமுதாய கழிப்பறை வசதிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் புதிய அட்டைகளை வழங்குதல், மகளிர் சுய உதவிக்குழுக்கடன் வழங்குதல், தொழில் கடன் வசதிகள், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கல்வி பயிலும் மாணவர்களின் விபரம், இடைநிற்றல், கல்வி உதவித்தொகை வழங்குதல், இல்லம் தேடி கல்வி செயல்படுத்துதல், மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் சார்பில் புதிய உபகரணங்கள் வழங்குதல், சுகாதாரத்துறையின் சார்பில் மருத்துவ சிறப்பு முகாம் நடத்துதல் போன்றவற்றை அனைவரும் பெரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கொடைக்கானல் வருவாய் வட்டத்தில் கொடைக்கானல், வில்பட்டி, பூம்பாறை, கூக்கால், மன்னவனூர், பூண்டி, அடுக்கம், வடகவுஞ்சி, பண்ணைக்காடு,பூலத்தூர், வெள்ளகவி, தாண்டிக்குடி, காமனூர், கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர், பழனி வருவாய் வட்டத்தில் ஆண்டிப்பட்டி, பெரியம்மாபட்டி, அய்யம்புள்ளி, பாலசமுத்திரம், மேற்கு ஆயக்குடி, வடகாடு, திண்டுக்கல் கிழக்கு வருவாய் வட்டத்தில் சிறுமலை, திண்டுக்கல் மேற்கு வருவாய் வட்டத்தில் தருமத்துப்பட்டி, பழனி வருவாய் வட்டத்தில் ஆயக்குடி, பழனி, நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் வருவாய் வட்டத்தில் ஒட்டன்சத்திரம், ஆத்தூர் வருவாய் வட்டத்தில் மன்னவன்னூர் ஆகிய வருவாய் கிராமங்களில் நடைபெற்றது. தொடர்ந்து 4 நாட்களுக்கு நடைபெறும். இந்த வாய்ப்பினை பளியர் இன பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.