அரசு மரியாதை – உடல் உறுப்பு தானம் – மேட்டுப்பட்டி
செ.வெ.எண்:-43/2026
நாள்:-17.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி புதுரை சேர்ந்த திரு.கோபிநாத் என்பவரின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக அன்னாரது உடலுக்கு திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.மூ.திருமலை அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி புதுரை சேர்ந்த த.பெ. குமார் மற்றும் விஜயலட்சுமி தம்பதியரின் மகன் திரு.கோபிநாத் (வயது 29) வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட போது நினைவுக் குறைவு இருந்ததால் மருத்துவர்கள் செயற்கை சுவாசம் மூலம் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை அளித்தும் உடல் நிலையில் மூளைச்சாவு காரணமாக, அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக மேட்டுப்பட்டி புதுரில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.மூ.திருமலை அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. மரணம் அடைந்த துயரச் சூழலில் அவரது உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் அவருடைய குடும்பத்தினரின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தை போற்றிடும் வகையில், தமிழகத்தில் இறந்த பின்னர் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அவர்களின் இறுதிச்சடங்கில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திண்டுக்கல் மேட்டுப்பட்டி புதுரை சேர்ந்த திரு.கோபிநாத் மூளைச்சாவு அடைந்து அன்னாரது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். தமிழ்நாடு உறுப்பு தான ஒருங்கிணைப்புக் குழுவின் வழிகாட்டுதலின் பேரில் மருத்துவர் குழுவினரால் அறுவைச் சிகிச்சை மூலம் சிறுநீரகங்கள், கண் மற்றும் தோல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட உறுப்புகள் உடனடியாக அவை தேவைப்படும் நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் உரிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த உடல் உறுப்பு தானத்தின் மூலம் 5 பயனாளிகள் மறுவாழ்வு பெற உள்ளனர்கள்.
மேலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக இருந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு இதுவரை முளைச்சாவு அடைந்த 3 நபர்களிடமிருந்து உடல் உள் உறுப்புகளை தானமாக பெறப்பட்டுள்ளன.
திண்டுக்கல் புதூர் மயானத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் திரு.கோபிநாத் உடலுக்கு திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.மூ.திருமலை அவர்கள் அரசு சார்பில் மலர் வளையம் வைத்து மதியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் திரு.ராஜேந்திரன் அவர்கள் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.