அறிவியல் திருவிழா-2026
செ.வெ.எண்:-04/2026
நாள்:-04.01.2026
பத்திரிகை செய்தி
மாநில அளவிலான ‘திண்டுக்கல் அறிவியல் திருவிழா 2026’-ஐ முன்னிட்டு முதல் சுற்று அறிவியல் கண்காட்சி
அறிவியல் ஆர்வத்தையும் அறிவியல் அணுகுமுறைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து ‘மாநில அளவிலான அறிவியல் திருவிழா 2026’ திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் 28.01.2026 முதல் 03.02.2026 முடிய 7 நாட்கள் நடைபெற உள்ளது. அறிவியல் திருவிழாவின் முக்கிய அம்சங்களாக அறிவியல் தொழில்நுட்பம்,ரோபோட்டிக்ஸ்,பசுமை ஆற்றல்கள்,செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், அறிவியல்சார் தொழில் முனைவு ஆகியவை உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் பதின் பருவ மாணவ,மாணவியரிடம் அறிவியல் தொடர்பான ஆர்வத்தை ஊக்குவித்து உயர்கல்வியில் அறிவியல் தொடர்பான நாட்டத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது .
இதன் பொருட்டு பள்ளி மாணவ/மாணவியருக்கான போட்டிகள்,அறிவியல் செய்முறை விளக்கங்கள்,அறிவியல் கண்காட்சிகள் நடைபெற உள்ளன. இதில் கலந்த கொள்ள 03.12.2025 முதல் 28.12.2025 வரை இணைய வழியில் மாணவ/மாணவியர் முன்பதிவு செய்திருந்தனர். இதன்படி முன்பதிவு செய்யப்பட்ட பள்ளி மாணவ/மாணவியரின் 1157 படைப்புகள் பின்வரும் 4 மையங்களில் அரசு நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் ஒரு பிரிவாகவும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்/தனியார் பள்ளிகள் மற்றொரு பிரிவாகவும் தனித்தனியாக 09.01.2026 வெள்ளிக்கிழமையன்று முதல் சுற்றில் காட்சிப் படுத்தப்பட உள்ளன.
1.(மையம்-1) பி.எஸ்.என்.ஏ.கல்லூரி,திண்டுக்கல் 6-8 வகுப்புகள் 667 படைப்புகள்(கொடைக்கானல் தவிர அனைத்து ஒன்றிய பள்ளிகள்)
2.(மையம் -2) ஜி.டி.என்.கல்லூரி,திண்டுக்கல் 9&10 வகுப்புகள் -307 படைப்புகள்(கொடைக்கானல் தவிர அனைத்து ஒன்றிய பள்ளிகள்)
3.(மையம்- 3) எம்.எஸ்.பி.மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் 11&12 வகுப்புகள் 157 படைப்புகள் (கொடைக்கானல் தவிர அனைத்து ஒன்றிய பள்ளிகள்)
4.(மையம் -4) அரசு மேல்நிலைப்பள்ளி கொடைக்கானல் 6-12 வகுப்புகள் 26 படைப்புகள் (கொடைக்கானல் ஒன்றிய பள்ளிகள் மட்டும்)
இந்நிகழ்ச்சியில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகள் மாவட்ட அளவில் கலந்து கொள்ள உள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியாக 40 வீதம் மொத்தம் 240 சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட உள்ளன. தேர்வு செய்யப்பட்ட 240 படைப்புகள் அறிவியல் திருவிழா நாட்களில் பிரிவு வாரியாக ஒவ்வொரு நாளும் 40 படைப்புகள் காட்சிப்படுத்தப்படும். ஒவ்வொரு நாளும் காட்சிப்படுத்தப்படும் படைப்புகளுக்கு முதல்,இரண்டாம்,மூன்றாம் இடம் என பரிசுத்தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளது. பங்கேற்கும் மாணவ/மாணவியர் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். எனவே பதிவு செய்த மாணவ/மாணவியரை அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ஆசிரியர்கள்/பெற்றோர்கள் ஆர்வமூட்டி அறிவியல் திருவிழாவில் பங்கேற்க ஊக்கப்படுத்தி அறிவியல் படைப்புகளை சமர்ப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,திண்டுக்கல்.