மூடு

இலவச வீட்டுமனைப் பட்டா விநியோகம்.

வெளியிடப்பட்ட தேதி : 04/02/2026

செ.வெ.எண்: 06/2026

நாள்: 03.02.2026

திண்டுக்கல் மாவட்டத்தில் 1,32,501 பயனாளிகளுக்கு ரூ.107.57 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக ஆட்சிப்பொறுப்பேற்ற பின் எண்ணற்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். பேரறிஞர் அண்ணா அவர்களின் வழியில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில், சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில், சமூகத்தில் வீடற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அனைவருக்கும் சொந்தமாக குடியிருப்பு வசதி பெறுவதற்காக இலவச வீட்டுமனைப் பட்டா அல்லது வீடு வழங்க வேண்டுமென்பதே தமிழ்நாடு அரசின் தலையாய கொள்கையாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு கிராம நத்தத்தில் காலியாகவுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் தகுதியுடைய, வீடற்ற ஏழை-எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சமூகத்தில் பெண்களும் அனைத்து நிலைகளிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், பெண்கள் சிறு தொழில்கள் செய்து சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற நோக்கில் கடனுதவிகளை வழங்கி வருகிறார்கள். அதனடிப்படையில், மகளிர் விடியல் பயணத் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் திட்டம், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.பெண்கள் நலனை உறுதி செய்யும் வகையில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் குடும்பத்தின் பெண் உறுப்பினர் பெயரில் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஊரகப் பகுதியில் மூன்று சென்ட் நிலமும், நகர்ப்புற பகுதியில் ஒன்றரை சென்ட் நிலமும், மாநகராட்சிப் பகுதிகளில் ஒரு சென்ட் நிலமும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு நடைமுறையில் உள்ள விதிகளின்படியும், இதர நிபந்தனைகளுக்கு உட்பட்டும் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், கிராம நத்தத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க தகுதியுடைய காலியாகவுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டி 5 வருடத்திற்கு மேல் குடியிருந்து வரும் நபர்களுக்கு அவர்களின் பெயரில் அந்நிலத்தை வரன்முறைபடுத்தி இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் (07.05.2021) முதல் தற்போது வரை திண்டுக்கல் மாவட்டத்தில் 1,32,501 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில், அதாவது, திண்டுக்கல்(கிழக்கு) வட்டத்தில் 26,951 பயனாளிகளுக்கு ரூ.31.45 கோடி மதிப்பிலும்இ திண்டுக்கல்(மேற்கு) வட்டத்தில் 26,756 பயனாளிகளுக்கு ரூ.23.05 கோடி மதிப்பிலும், ஆத்துார் வட்டத்தில் 8,887 பயனாளிகளுக்கு ரூ.6.70 கோடி மதிப்பிலும், நிலக்கோட்டை வட்டத்தில் 12,240 பயனாளிகளுக்கு ரூ.9.76 கோடி மதிப்பிலும், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் 12,339 பயனாளிகளுக்கு ரூ.10.12 கோடி மதிப்பிலும், பழனி வட்டத்தில் 11,979 பயனாளிகளுக்கு ரூ.12.66 கோடி மதிப்பிலும், கொடைக்கானல் வட்டத்தில் 8,335 பயனாளிகளுக்கு ரூ.4.37 கோடி மதிப்பிலும், வேடசந்துார் வட்டத்தில் 8,920 பயனாளிகளுக்கு ரூ.3.49 கோடி மதிப்பிலும், நத்தம் வட்டத்தில் 8,668 பயனாளிகளுக்கு ரூ.2.70 கோடி மதிப்பிலும், குஜிலியம்பாறை வட்டத்தில் 7,426 பயனாளிகளுக்கு ரூ.3.27 கோடி மதிப்பிலும் என ஆக மொத்தம் 1,32,501 பயனாளிகளுக்கு ரூ.107.57 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளி திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த திருமதி.பழனியம்மாள் அவர்கள் தெரிவித்ததாவது:-

என் பெயர் பழனியம்மாள். நான் ஆத்தூரில் வசித்து வருகின்றேன். நான் சித்தால் வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகிறேன். எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நாங்கள் 20 வருடமாக வீட்டுமனை பட்டா இல்லாமல் புறம்போக்கு நிலத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றோம். நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு இலவச வீட்டுமனை பட்டா வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். என்னால் அரசு அலுவலகங்களுக்குச் சென்று அதற்கான பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தேன். இந்த அரசு வந்ததும் அரசு சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படுவதை அறிந்து, நானும், நான் குடியிருக்கும் வீட்டிற்கு இலவச வீட்டுமனை பட்டா வேண்டி விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்போது எனக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கிடைத்துள்ளது. எனது கோரிக்கையினை ஏற்று இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என திருமதி.பழனியம்மாள் அவர்கள் தெரிவித்தார்.

இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளி திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், சிந்தலப்பட்டி கிராமத்தை சேர்ந்த திருமதி.மேரி அவர்கள் தெரிவித்ததாவது:-

என் பெயர் மேரி. நான் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், சிந்தலப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். சொந்தமாக வீடு இல்லாததால் நான் குடும்பத்துடன் மிகவும் சிரமப்பட்டு வந்தேன். அப்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை தொடங்கி வைத்துள்ளார்கள் என்றும், இத்திட்ட முகாம் ஒவ்வொரு கிராமத்திலும் நடைபெறும் என்றும், இத்திட்டமுகாமில் வழங்கப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்கள். அதனடிப்படையில், எங்கள் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டி மனு கொடுத்தேன்.

நான் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு கொடுத்தபோது, மனுவினைப் பெற்றுகொண்ட அரசு அலுவலர்கள், தங்களுடைய மனுவினை பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். அதனடிப்படையில், மனு கொடுத்து 45 நாட்கள் ஆன நிலையில் எனக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இலவச வீட்டுனைப் பட்டாவினை தொப்பம்பட்டி வேல் மஹாலில் 21.12.2025-அன்று நடைபெறும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழாவில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்கள்.

அதனடிப்படையில், நான் தொப்பம்பட்டி வேல் மஹாலில் நடைபெற்ற இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழாவில் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டாவினை பெற்றுக்கொண்டேன். மேலும், எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இலவச வீட்டுனையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு மனுக்கள் அளிக்கும்படியும், மனு கொடுத்தல் கலைஞர் கனவு இல்லம் வீடு கட்டி கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்கள். எனவே, என்னைப்போன்று குடியிருப்பதற்கு வீடு இல்லாமல் தவிக்கும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் போன்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, அத்திட்டங்களின் மூலம் வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது சார்பாகவும், எனது குடும்ப உறுப்பினர்களின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளி திண்டுக்கல் மாவட்டம், மேற்கு கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த திருமதி மகாலெட்சுமி அவர்கள் தெரிவித்ததாவது:-

என் பெயர் மகாலெட்சுமி. நான் திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரம் பகுதியில் கடந்த 40 வருட காலமாக வசித்து வருகிறேன். நான் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா இல்லாமல் குடியிருந்து வந்தோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பெற்ற பின்பு பட்டா இல்லா வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எங்கள் பகுதியில் ”உங்களுடன் ஸ்டாலின் முகாம்” நடைபெற்றது. இந்த முகாமில் நான் வீட்டுமனை பட்டா வேண்டி கோரிக்கை மனு அளித்தேன். என்னுடைய கோரிக்கை மனுவினை பரிசீலினை செய்து, நான் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கினார்கள். எனது வீட்டிற்கு பட்டா இல்லாமல் வசித்து வந்த எங்களுக்கு பட்டா வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் என் குடும்பத்தினர் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என திருமதி.மகாலெட்சுமி அவர்கள் தெரிவித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றார்போல், சமூக சீர்திருத்தத் திட்டங்களை அறிமுகப்படுத்தி, சமூகத்தில் நலிந்த பிரிவினரைப் பாதுகாத்து அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது என்றால் அது மிகையாகாது.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.