மூடு

“சொந்த நூலகங்களுக்கு விருது“ பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 28/08/2024

செ.வெ.எண்:-57/2024

நாள்:-21.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

“சொந்த நூலகங்களுக்கு விருது“ பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2024-2025-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது, மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசு வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு மாவட்டம்தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்கள் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களைக் கண்டறிந்து ஊக்குவிக்க ரூ.1.14 இலட்சம் மதிப்பீட்டில் சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.

இந்த அறிவிப்பின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் சொந்த நூலகம் அமைத்து சிறப்பாகச் செயல்படுத்தி வரும் தீவிர வாசகர்கள் தானாகவோ அல்லது பிறர் மூலமாக சம்மந்தப்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள நூலகங்களிலோ அல்லது dlodindigul@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் “மாவட்ட நூலக அலுவலர், ஸ்பென்சர் காம்பவுண்டு, பேருந்து நிலையம் அருகில் திண்டுக்கல்“ என்ற முகவரிக்கு தபால் மூலமும் அனுப்பலாம்.

விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் செயல்படுத்தி வரும் நூலகத்தின் விவரங்கள், நுால்களின் எண்ணிக்கை, அவை அரிய வகை நூல்களா மற்றும் எந்த நாள் முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது என்பன போன்ற விவரங்களுடன் உரிய புகைப்படத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

மாவட்ட அளவில் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு நூலகம் தேர்வு செய்யப்பட்டு ரூ.3,000 மதிப்புள்ள “சொந்த நூலகத்திற்கான விருது“ மற்றும் சான்றிதழ் திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்தப்பெறும் புத்தகக் கண்காட்சியில் வழங்கப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.