மூடு

“தமிழ்ப்புதல்வன்“ திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக் கல்லுாரி பொறுப்பு அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 30/07/2024
.

செ.வெ.எண்:-71/2024

நாள்:-26.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

“தமிழ்ப்புதல்வன்“ திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக் கல்லுாரி பொறுப்பு அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் “தமிழ்ப்புதல்வன்“ திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக் கல்லுாரி பொறுப்பு அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் அரசு எம்.வி.எம். கலைக் கல்லுாரியில் இன்று(26.07.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 05.09.2022 அன்று அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு, தொழில்நுட்பப் படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் “புதுமைப்பெண்“ திட்டம் துவங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில், 2024-2025-ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு “தமிழ்ப்புதல்வன்“ என்ற பெயரில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச்சட்டத்தின் (Right to Education) கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்று பின் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற மாணவர்கள் தங்கள் உயர்கல்வி நிறுவனங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி சேமிக்கு கணக்கு மற்றும் கைபேசி எண், பள்ளிகளில் மாணவர்களுக்கான இஎம்ஐஎஸ்(EMIS) எண் கல்லுாரிகளில் சேர்ந்த பின்னர் மாணவர்களுக்கான யுஎம்ஐஎஸ்(UMIS) எண்ணுடன் ஒருங்கிணைப்பு செய்தல், மின்னஞ்சல் முகவரி, வங்கி சேமிப்பு கணக்கு இல்லாத மாணவர்களுக்கு புதியதாக வங்கிக் சேமிப்பு கணக்குகளை விரைவாக தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து செயலாற்றிட வேண்டும்.

தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 தொகை, மாணவர்கள் தங்கள் கல்விக்கான செலவுகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ள வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், பெற்றோர்களின் கல்விச் செலவு சுமை குறைகிறது. இதன்மூலம் ஏழை, எளிய மாணவர்கள் அதிகமானோர் உயர்கல்வி பயின்றிட வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் இத்திட்டத்தில் பயன்பெற சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, முன்னோடி வங்கி மேலாளர் திரு.அருணாச்சலம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.