திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்த தான தினம் – 2025 நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
செ.வெ.எண்:-40/2025
நாள்:-10.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்த தான தினம் – 2025 நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்த தான தினம் – 2025 நிகழ்ச்சியை இன்று (10.11.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
நாம் அனைவரும் உடல் நலத்தை பேணிப் பாதுகாப்பது என்பது இன்றியமையாத ஒன்றாகும். ஏனெனில், நாம் அனைவரும் ஏதாவது ஒரு பணியில் ஈடுபட்டால்தான் வருவாய் ஈட்ட முடியும். பணியில் ஈடுபடும்போது உடல்நலம் சரியாக இருந்தால்தான் அப்பணியில் முழுமையாக ஈடுபட முடியும். உடல் நலம் சரியாக இருந்தால் நாம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்து நமது பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும். இதனை கருத்திற்கொண்டு அனைவரும் உடல்நலத்தை பேணுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் ”சீமான் சென்டர்” என்ற ஒரு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் 24 மணி நேரமும் மக்களுக்கு சேவைப்பணியாற்றி வருகின்றனர். அதேபோல், தனி நபர் வாயிலாகவோ, தன்னார்வ அமைப்புகள் வாயிலாகவோ இரத்த தானம் வழங்கப்படுகிறது. ஒரு தனி நபரையோ, தன்னார்வ அமைப்புகளையோ இரத்த தானம் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. ஒரு தனி நபர் தாமாக முன்வந்து இரத்த தானம் வழங்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இரத்த தானம் வழங்க வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்கள் எண்ணத்தில் தாமாக வளர வேண்டும். தாங்கள் மட்டும் இரத்த தானம் கொடுத்தால் மட்டும் போதாது இளைய தலையமுறையினரையும் இரத்ததானம் கொடுப்பதற்கு ஆலோசனை வழங்க வேண்டும். இரத்ததானம் கொடுப்பதற்கு முன்வரும் இளைய தலையமுறையினரை ஊக்குவிக்க வேண்டும்.
தன்னலம் கருதாது இரத்ததானம் வழங்கி வரும் நீங்கள்தான் இந்த விழாவினை சிறப்பிக்க வந்திருக்கும் தலைமை விருந்தினர்கள். நீங்கள் இரத்ததானம் வழங்குவதன் வாயிலாக ஏதாவதொரு வகையில், ஏதாவது ஒரு உயிரை காப்பாற்றி வருகின்றனர். நீங்கள் அளித்து வரும் இந்த பங்களிப்பானது மிகவும் அளப்பறிய செயலாகும். இத்தகைய செயலினால் உங்கள் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பெருமை சேரும். ”பிறப்பு என்பது ஒரு சாதாரணமான சம்பவமாக இருந்திருக்கலாம், ஆனால் நமது இறப்பு என்பது சரித்திரமாக புத்தகத்தில் இடம்பெற வேண்டும்” என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
மேலும், இன்றைய தினம் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்ததான தின நிகழ்ச்சியில், 68 இரத்ததான முகாம் அமைப்புகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து, இன்றைய தினம் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்ததான தின நிகழ்ச்சியில், ”இரத்தத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, தன்னார்வ இரத்த தானம் செய்வதன், அவசியம் குறித்து, எனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். ஒருவருக்கு இரத்தம் தேவைப்படும் போது எந்த வித நோக்கமும், பாகுபாடுமின்றி எந்த உயிர் இழப்பும் ஏற்படாதிருக்க, தன்னார்வமாக இரத்த தானம் செய்வேன் என உறுதி அளிக்கிறேன.” என்ற வாசகம் அடங்கிய உறுதிமொழியினை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முன்னிலையில் எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பேராசிரியர் திரு.வீரமணி, துணை முதல்வர் பேராசிரியர் திரு.சலீம், மருத்துவ கண்காணிப்பாளர் பேராசிரியர் திரு.சுரேஸ்பாபு, நிலைய மருத்துவ அலுவலர் மரு.புவனேஸ்வரி, காசநோய் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் மரு.முத்து பாண்டியன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.