நான்கு வழி மேம்பாலம் கட்டுவதற்கு மாண்புமிகு உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
செ.வெ.எண்:-17/2026
நாள்:-05.03.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பழனி வட்டம், பழனி – தாராபுரம் சாலையில் ரூ.69.10 கோடி மதிப்பீட்டில் நான்கு வழி சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி – தாராபுரம் சாலையில் ரூ.69.10 கோடி மதிப்பீட்டில் நான்கு வழி சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு இன்று (05.03.2026) அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பழனி – தாராபுரம் சாலையானது மாநில் நெடுஞ்சாலையாகும். இச்சாலையானது தாராபுரம், திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற இடங்களிலிருந்து பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மற்றும் மதுரைக்கு செல்ல பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய சாலையாகும். மேலும், திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவசர நிலை காரணமாக இச்சாலையில் பயணம் செய்யும் போது இரயில்வே கேட் அடைக்கப்படுவதால் இயில்வே கேட் திறக்கும் வரை காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், அவசர பணிக்கோ அல்லது அவசர சிகிச்சைக்கே செல்லும் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
எனவே, இச்சாலையில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கும், இச்சாலையினை பயன்படுத்தும் பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டும் பழனி-தாராபுரம் சாலையில் இயில்வே கடவு எண்.63-க்கு மாற்றாக, அரசாணை எண்.16, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் (HS1)த்துறை, நாள்.02.02.2026-ன்படி, நான்கு வழி சாலை மேம்பாலம் அமைப்பதற்கு ரூ.69.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்றைய தினம் நான்கு வழி சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலம் நீளம்-750.66 மீ, அகலம் – 17.20 மீ கொண்டதாகவும், 14 தூண்களுடனும் அமைக்கப்படவுள்ளது. மேலும், பாலத்தின் அணுகு சாலை 162 மீ பழனி பக்கமும், 90 மீ தாராபுரம் பக்கமும், பயனூறு சாலை 5.50 மீ அகலத்திற்கு இரண்டு பக்கமும் மற்றும் மழைநீர் வடிகால் 1857மீ நீளத்திற்கும் அமைக்கப்படவுள்ளது. தொடர்ந்து, நில எடுப்பு அரசாணை எண்.39, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் (HS1)த்துறை, நாள்.24.04.2023-ன்படி, ரூ.26.39 கோடிக்கு நிர்வாக அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இந்த நில எடுப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, பல்வேறு துறைகள் இருந்தாலும் ”பள்ளிக்கல்வித் துறை” மற்றும் ”மருத்துவத்துறை” இரண்டு துறைகளும் இரண்டு கண்கள் ஆகும். மருத்துவத்துறையினை மேம்படுத்துவதற்கு முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கியும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். அதனடிப்படையில், பழனி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.70.00 கோடி மதிப்பீட்டில் 137 படுக்கை வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டங்களை இன்றைய தினம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். எனவே, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை மக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.
இவ்விழாவில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப்பொறியாளர் (திட்டங்கள், உட்கோட்டம்) திருமதி.இரா.லட்சுமி, திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் (திட்டங்கள் பிரிவு – I) திருமதி.ம.சித்ரா, மதுரை நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (திட்டங்கள்) திரு.கே.ஆர்.சுரேஷ்பாபு, மதுரை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளர் (திட்டங்கள்) திரு.ஆர்.கே.ரமேஷ்,பழனி நகர்மன்றத் தலைவர் திருமதி.இரா.உமாமகேஸ்வரி, துணைத் தலைவர் திரு.கே.கந்தசாமி அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.