மூடு

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கோட்டூர் ஊராட்சி, சங்கால்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 118 பயனாளிகளுக்கு ரூ.53.94 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 14/06/2024
.

செ.வெ.எண்:-20/2024

நாள்:-12.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கோட்டூர் ஊராட்சி, சங்கால்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 118 பயனாளிகளுக்கு ரூ.53.94 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கோட்டூர் ஊராட்சி, சங்கால்பட்டி கிராமத்தில் இன்று(12.06.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 118 பயனாளிகளுக்கு ரூ.53.94 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முகாமில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டார்.

முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு சிரமமின்றி தீர்வு காண வேண்டும் என்பதற்காக இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்கள் ஒவ்வொரு கிராமப்புற பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்.

பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இத்திட்டம் இந்த கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ளது.

குழந்தைகள் கல்வி கற்பதை உறுதிப்படுத்திட வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்திட வேண்டும். குழந்தைகளை வருமானம் ஈட்டக்கூடிய பொருளாக கருதாமல் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் கல்வியறிவு பெற்றிட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வீடு இல்லாத குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவிலான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. மே-2024-ஆம் மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பெறாதவர்கள் நடப்பு ஜுன்-2024-ஆம் மாதத்தில் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்,

இம்முகாமில், 5 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை ரூ.50,000 மதிப்பீட்டிலும், ஒரு பயனாளிக்கு விபத்து நிவாரணம் ரூ.1.02 இலட்சம் மதிப்பீட்டிலும், 36 பயனாளிகளுக்கு இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.7.97 இலட்சம் மதிப்பீட்டிலும், 5 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.12,500 மதிப்பீட்டிலும், 27 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா ரூ.19.32 இலட்சம் மதிப்பீட்டிலும், 8 பயனாளிகளுக்கு முழுப்புலம் வீட்டுனைப் பட்டா ரூ.5.76 இலட்சம் மதிப்பீட்டிலும், 3 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா ரூ.2.16 இலட்சம் மதிப்பீட்டிலும், 4 பயனாளிகளுக்கு வேளாண்மை இடுபொருள் ரூ.10,293 மதிப்பீட்டிலும், 2 பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறை இடுபொருட்கள் ரூ.17.08 இலட்சம் மதிப்பீட்டிலும், 27 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள் என மொத்தம் 118 பயனாளிகளுக்கு ரூ.53.94 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசின் திட்டங்களை அறிந்து நல்லமுறையில் பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

இம்முகாமில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி அனுசுயா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி காயத்ரி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநர் திரு.மாயகிருஷ்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி பூங்கொடி, நிலக்கோட்டை வட்டாட்சியர் திரு.தனுஸ்கோடி, ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சுகந்தா, உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.