மூடு

தமிழ் வளர்ச்சித் துறை- குறள்சார்ந்த ஓவியப்போட்டி மற்றும் குறள் ஒப்பித்தல் போட்டிகள்.

வெளியிடப்பட்ட தேதி : 10/01/2026

செ.வெ.எண்:-23/2026

நாள்:-09.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிகை செய்தி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024-ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளிவிழா நிகழ்ச்சியில் ஒவ்வோராண்டும் குறள் வாரம் கொண்டாடப்பெறும் என அறிவிக்கப்பெற்றது. இதனை செயல்படுத்தும் விதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் திருக்குறள் கருத்துகள் அனைவரையும் சென்றடையும் வண்ணம் பொதுமக்கள் மட்டும் (அரசு அலுவலர்கள் / பணியாளர்கள் / ஆசிரியர்கள் / பேராசிரியர்கள் / பள்ளி, கல்லூரி மாணவ / மாணவியர்கள் நீங்கலாக) கலந்து கொள்ளும் குறள்சார்ந்த ஓவியப்போட்டி மற்றும் குறள் ஒப்பித்தல் போட்டிகள் மாவட்ட நிருவாகம் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக 12.01.2026-அன்று திங்கள் கிழமை அங்குவிலாஸ் மேனிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.

பொதுமக்களுக்கு மட்டுமான குறள் சார்ந்த ஓவியப் போட்டி / குறள் ஒப்பித்தல் போட்டிகளில் பங்கேற்பவர்கள் தங்களது பதிவை போட்டி நாளன்று போட்டி நடைபெறும் இடமான அங்குவிலாஸ் மேனிலைப் பள்ளியில் முற்பகல் 9.00 மணி முதல் 10.30 மணி வரை ஆதார் அட்டை நகல் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் வருகை தந்து பதிவு செய்துகொள்ளலாம். ஓவியப் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் A4 அளவு தாளில் மட்டுமே ஓவியம் வரைய அனுமதிக்கப்படுவர். மேலும், ஓவியம் வரைவதற்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் உடன் கொண்டு வர வேண்டும். ஓவியப் போட்டிக்கான நேரம் 1 மணி நேரம் ஆகும். குறள் சார்ந்த ஓவியங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் (ஏதேனும் ஒரு குறளினை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்).

அதிக எண்ணிக்கையிலான குறள்களை ஒப்பித்தோர் தரவரிசை அடிப்படையில் முதல் 5 பேருக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.5000/- வீதமும், அடுத்த 5 பேருக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.3000/- வீதமும், அடுத்த 5 பேருக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.2000/- வீதம் வழங்கப்படும். மேலும் ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000/-மும், இரண்டாம் பரிசு ரூ.3000/-மும், மூன்றாம் பரிசு ரூ.2000/- வழங்கப்படும்.

கூடுதல் விவரங்களை அறிந்துகொள்வதற்கு உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, மாவட்ட ஆட்சியரகம், திண்டுக்கல் என்ற முகவரியில் செயல்பட்டு தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்திற்கு நேரிலும் அல்லது அலைபேசி எண் (0451-2461585)-க்கு தொடர்பு கொண்டும் தகவலினை பெற்றுக்கொள்ளலாம். எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள குறள்வார விழாப்போட்டிகளில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.