பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
செ.வெ.எண்:-22/2025
நாள்:09.01.2025
திண்டுக்கல் மாவட்டம்
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(09.01.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் 2025-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா 05.02.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 14.02.2025 –ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பழனி தைப்பூச திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகை தரும் பக்தர்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பழனி நகரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்க தென்னக ரயில்வேக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கோயம்புத்துார் வழித்தடம், திண்டுக்கல் வழித்தடம், பழைய தாராபுரம் சாலை, புதுத்தாராபுரம் சாலை போன்ற வழித்தடங்களில் சாலை மார்க்கமாக பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக பாதயாத்திரை நடைபாதைகளை உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் புதர்கள், குப்பைகள் மற்றும் கற்கள் முழுமையாக அகற்றப்பட்டு உரிய சுகாதாரம் பேணப்படுகிறது. மேலும் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றி வரும் வண்ணம் தற்காலிக விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்காலிக கழிப்பறைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சாலை மார்க்கமாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு பாத்தியப்பட்ட கழிப்பறைகளை சுத்தம் செய்தும் பக்தா;கள் பயன்படுத்தும் வண்ணம் வழிகாட்டி பதாகைகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை தைப்பூசத் திருவிழா முடியும் வரை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் 11 கண்காணிப்புக் குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
பழனி தைப்பூசத் திருவிழாவிற்கு பக்தர்கள் வருகை தரும் நான்கு சக்கர வாகனங்கள் போக்குவரத்து இடையூறு இன்றி நிறுத்துவதற்கு தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் புனித நீராடும் பொருட்டு இடும்பன்குளம் மற்றும் சண்முகநதியில் துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பெண் பக்தர்கள் உடை மாற்றுவதற்கு தனி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறையின் மூலமாக மீட்பு பணி காவலர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருப்பதற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பழனி நகரில் துாய்மையை பாதுகாக்கும் பொருட்டு “பசுமை பழனி“ என்ற நோக்கத்துடன் பழனி நகருக்குள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தவிh;க்கும் பொருட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றுகை செய்வதற்கு 8 பிளாஸ்டிக் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பழனி நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது.
அன்னதானம் வழங்கும் நபர்கள் உரிய சுகாதார மற்றும் அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி அன்னதானம் வழங்கிடவும், உணவு கழிவுகளை பயோ கவர்(Bio cover) மூலமாக சேகரித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் வழங்க வேண்டும்.
பாதயாத்திரை பயண வழிகளில் 24 மணி நேரமும் செயல்படத்தக்க வகையில் முதலுதவி மருத்துவ முகாம்கள் அமைக்கவும், சண்முகநதி, இடும்பன்குளம் ஆகிய இடங்களில் தலா ஒரு மருத்துவ குழுவினர் தேவையான மருத்துவ பொருட்களுடன் தயார் நிலையில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ வசதி குறித்து ஒலிபெருக்கி மூலமாக பாதயாத்திரை பக்தர்களுக்கு தெரியப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர் உலா வரும் பெரியநாயகியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு கிரி வீதிகளில் உள்ள சாலைகளை பழனி நகராட்சி சார்பில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளை ஆக்கிரமித்து உள்ள தற்காலிக கடைகளும் அகற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் துறை சார்ந்த விபரங்களை தெரிந்து கொள்ளவும், சேவைகளை பெறுவதற்கும் ஏதுவாக ஒவ்வொரு சாலை மார்க்கத்திலும் 100 மீட்டர் இடைவெளியில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை எளிதில் தொடர்பு கொள்ளும் தொலைபேசி எண்களுடன் கூடிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் பாதயாத்திரையாக வரக்கூடிய சாலை மார்க்கங்கள் மற்றும் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக அகற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இடும்பன்குளம் மற்றும் சண்முகநதி பகுதியில் புனித நீராடும் பக்தர்கள் தங்களது உடைகளை குளத்தில் போடாமல் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் போட்டு சுற்றுப்புற சூழலை பாதுகாக்குமாறும், பாதயாத்திரை வரக்கூடிய பக்தர்கள் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நடைபாதைகளில் நடக்குமாறும், இரவு 10.00 மணிக்கு மேல் பாதயாத்திரை மேற்கொள்வதை தவிர்க்கவும், அன்னதானம் வழங்கக் கூடிய இடங்களில் உணவுக் கழிவுகளை அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் போட்டு, சுகாதாரத்தை காத்திட அனைத்து பக்தர்களும் ஒத்துழைக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., பழனி சார் ஆட்சியர் திரு.சீ.கிஷன்குமார், இ.ஆ.ப., திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், துணை ஆட்சியர்(பயிற்சி) செல்வி ராஜேஸ்வரிசுவி, உணவு பாதுகாப்பு அலுவலர் திருமதி கலைவாணி, பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உதவி ஆணையாளர் திருமதி இலட்சுமி, செயற்பொறியாளர் திரு.பிரேம்குமார், உதவி செயற்பொறியாளர் திருமதி அழகுரீனா, உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திரு.ராஜா, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.ஐ.நாகராஜன், வட்டாட்சியர்கள், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.