பாலாறு-பொருந்தலாறு அணையின் நீர் திறப்பு நிகழ்ச்சியை மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
செ.வெ.எண்:-38/2026
நாள்:14.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீரினை திறந்து வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீரினை இன்று (14.01.2026) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வேளாண் பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று, பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று(14.01.2026) தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க நீர்வளத் (கே.1) துறை அரசாணை (வாலாயம்) எண்.27, நாள்.12.01.2026 படி, இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து, இடது பிரதான கால்வாயின் (புதிய ஆயக்கட்டு) புனிசெய் பாசனப்பரப்பு 9600 ஏக்கர் பாசன நிலங்களில் உள்ள பயிர்களுக்காக 13.01.2026 முதல் 11.02.2026 வரை 30 நாட்களுக்கு முதல் 5 நாள்களுக்கு வினாடிக்கு 70 கன அடி வீதம் 30.24 மில்லியன் கன அடியும், அடுத்த 25 நாட்களுக்கு வினாடிக்கு 20 கன அடி வீதம் 43.20 மில்லியன் கன அடியும் ஆகமொத்தம் 73.44 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் (நீரிழப்பு உட்பட) அணையின் தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து, தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன்மூலம், பழனி வட்டத்திலுள்ள 9,600 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். அதன்படி, பெரியம்மாபட்டி, இரவிமங்கலம், தாதநாயக்கன்பட்டி (தெ), நெய்க்காரபட்டி, சி.கலையம்புத்தூர்,பெத்தநாயக்கன்பட்டி, சுக்கமநாயக்கன்பட்டி, மானூர், தாதநாயக்கன்பட்டி (வ)இசித்திரைகுளம், தாழையூத்து, கொழுமங்கொண்டான், கோரிக்கடவு, கோவில்அம்மாபட்டி, மேல்கரைப்பட்டி, அக்கரைப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
பாலாறு பொருந்தலாறு அணையின் மொத்த கொள்ளளவு 1524 மில்லியன் கன அடி, அணையின் இன்றைய கொள்ளளவு 848.42 மில்லியன் கன அடி, அணையின் மொத்த உயரம் 65 அடி, அணையின் இன்றைய நீரின் உயரம் 51.54 அடி, அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 15 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 134 கன அடியாகவும் உள்ளது. புதிய ஆயக்கட்டு பாசன பரப்பில் உள்ள பயிர்களுக்கு திறக்கப்படும் மொத்த நீரின் அளவு 73.44 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. இந்த அணை பழனி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது.
பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், விவசாயிகள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயன்பெற வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு) திரு.பாலமுருகன், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், பழனி வட்டாட்சியர் திரு.பிரசன்னா, பாலசமுத்திரம் செயல் அலுவலர் திரு.சமுத்திரகனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.