மூடு

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகையை மாணவியர் வங்கிக் கணக்கில் செலுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 02/07/2024
.

செ.வெ.எண்:-58/2024

நாள்:-26.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகையை மாணவியர் வங்கிக் கணக்கில் செலுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையை மாணவியர் வங்கிக் கணக்கில் செலுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(26.06.2024)) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

பள்ளி படிப்பு பயிலும் மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் (GOI Prematric Scholarship) கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4,000 கல்வி உதவித்தொகை 2022-2023-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இக்கல்வி உதவித்தொகை 15.12.2023 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் 8,135 மாணவியர்கள் கண்டறியப்பட்டதில் 6,743 மாணவியர்களுக்கு தலா ரூ.4,000 வீதம் கல்வி உதவித்தொகை ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 1392 மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். 421 மாணவியர்கள் பல்வேறு காரணங்களால் பள்ளிக்கு வரவில்லை என்பது கண்டறியப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 2023-2024-ஆம் கல்வியாண்டில் 7,784 மாணவியர்கள் கண்டறியப்பட்டதில் 5,486 மாணவியர்களுக்கு தலா ரூ.4,000 வீதம் கல்வி உதவித்தொகை ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 2259 மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.

மீதமுள்ள 3651 மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிடவும், நிலுவையினங்களை குறைத்திடவும், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் உதவியுடன் செயல்பட்டு துரிதமாக நிலுவையைக் குறைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாணவியர்களில் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள், செயலற்ற வங்கி கணக்கு உள்ளவர்கள், ஆதார் இணைக்கப்படாத வங்கிக் கணக்குகள், செயல்படுத்தாத வங்கிக் கணக்கு, பிறந்த தேதி சரியான பதிவு இல்லாமல் இருத்தல் போன்ற காரணங்களை கண்டறிந்து சரி செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வங்கிக் கணக்கு இல்லாத மாணவியர்களுக்கு, வங்கிக் கணக்கு தொடங்கிட ஏதுவாக அவர்கள் படிக்கும் பள்ளிக்கு அருகில் உள்ள அஞ்சலகம், வங்கி ஊழியர்கள் மூலம் சிறப்பு முகாம் நடத்தி வங்கி கணக்கு(ஆதார் இணைப்புடன்) தொடங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். செயலற்ற வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் இணைக்கப்படாத வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைத்தல், செயல்படாத வங்கி கணக்குகளை செயல்பட செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நிலுவையினங்களை 30.06.2024-ஆம் தேதிக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலர் திரு.மா.மாரி, முன்னோடி வங்கி மேலாளர் திரு.அருணாச்சலம், வங்கியாளர்கள், கல்வித்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.