மூடு

மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் 229 பயனாளிகளுக்கு ரூ.5.12 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 16/08/2024
.

செ.வெ.எண்:-31/2024

நாள்:-12.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் 229 பயனாளிகளுக்கு ரூ.5.12 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ் அவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் திருமதி க.லட்சுமி பிரியா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பெருமாள்மலை புனித சூசையப்பர் நற்பணி மன்ற மண்டபத்தில் இன்று (12.08.2024) நடைபெற்ற உலக பழங்குடியினர் தின விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை தொடங்கி, 229 பயனாளிகளுக்கு ரூ.5.12 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் திரு.ச.அண்ணாதுரை, ம.தொ.ப., அவர்கள் திட்ட விளக்கவுரையாற்றினார்.

இவ்விழாவில், மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பழங்குடியினர் வாழ்வு வளம் பெற சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சி என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

உயர்கல்வி நுழைவுத் தேர்வு பயிற்சி மூலம் 25 பழங்குடி மாணாக்கர்கள் என்ஐடி, நிபட், மருத்துவம், சட்டக்கல்வி (NIT, NIFT. MBBS, National Law University) போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். 146 பழங்குடியின இளைஞர்களுக்கு என்டிடிஎப்(NTTF -Nettur Technical Training Foundation) நிறுவனத்தின் மூலம் ரூ.81.00 இலட்சம் மதிப்பீட்டில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கி பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

செவிலியர் படிப்பு, ரூ.1.30 கோடி செலவில், 3 ஆண்டுக்கு, ஒரு மாணவிக்கு ரூ.2.10 இலட்சம் வீதம் 62 பழங்குடியின மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்களின் அடிப்படை தேவையினை பூர்த்தி செய்யும் பொருட்டு, 22 மாவட்டங்களில் 5,824 புதிய வீடுகள் கட்டும் பணி ரூ. 277.00 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொல்குடி வேளாண்மை மேலாண்மை திட்டத்தின் மூலம் மூன்று ஆண்டுகளில் ரூ.15.65 கோடி மதிப்பீட்டில் 7,000 பழங்குடியின பயனாளிகள் பயன் பெறும் வகையில் ஐந்திணை என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பழங்குடியினர் பகுதிகளில் 4 ஆண்டுகளில் கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

110 சாலைப் பணிகள் ரூ. 25.27 கோடி மதிப்பீட்டிலும், குடிநீர் திட்டப்பணிகள் ரூ.32.00 இலட்சம் மதிப்பீட்டிலும், சமுதாயக்கூடம் போன்ற பணிகள் ரூ.33.50 இலட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

570 பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.1.96 கோடி மதிப்பீட்டில் கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. நவீன முறை வகுப்பறைகள் அமைக்கப்பட்டு நீட், ஜேஇஇ, சிஎல்ஏடி(NEET, JEE CLAT) ஆகிய நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சிகள் ரூ.41.40 இலட்சம் மதிப்பீட்டில் அளிக்கப்படுகின்றன. பழங்குடியினர் விடுதிகளில் மாணாக்கரின் நலனைக் கருத்தில் கொண்டு கண்காணிப்புக் கேமரா மற்றும் தொடுதிரை சாதனம் ஆகியவை ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன.

“தொட்டு விடும் தூரத்தில் இலக்கு” எனும் நோக்கில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கருக்கு உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை பயிலரங்கம் நடத்தப்படுகின்றன. தொலைதொடர்பு வசதி இல்லாத 78 கிராமங்களில் நீண்ட தூர கம்பியில்லா இணைப்பு பணிகள் ரூ.6.22 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.2.74 கோடி மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு, ரூ.68.00 இலட்சம் மதிப்பீட்டில் நீர்பாசன வசதி, ரூ.3.18 கோடி மதிப்பீட்டில் ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு. மூலிகை செடி. நர்சரி மற்றும் தேன் வளர்ப்பு, 38 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.

இன்றைய விழாவில், திண்டுக்கல் மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டா ரூ.1.97 இலட்சம் மதிப்பீட்டிலும், பழங்குடியினர் சாதிச்சான்று 29 பயனாளிகளுக்கும், தாமத பிறப்பு பதிவுச்சான்று 13 பயனாளிகளுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் நலவாரிய அட்டை 57 பயனாளிகளுக்கும், விலையில்லா தையல் இயந்திரம் 3 பயனாளிகளுக்கு ரூ.19,500 மதிப்பீட்டிலும், பழங்குடியினருக்கான வீடு கட்டும் திட்டத்தில் 89 பயனாளிகளுக்கு ரூ.5.09 கோடி மதிப்பீட்டிலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மருத்துவக் காப்பீடு அட்டை 18 பயனாளிகளுக்கும் என மொத்தம் 229 பயனாளிகளுக்கு ரூ.5.12 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கு ரூ.3500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வீடுகள் கட்டிதர தயாராக இருக்கிறோம். விடுபட்டவர்கள் தேவையான ஆவணங்களை கொடுத்து வீடு கட்டுவதற்கு ஆணைகளை பெற்றுகொள்ளலாம். தரை பகுதியாக இருந்தாலும், மலை பகுதியாக இருந்தாலும் அந்தந்த கிராமத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் வீடுகள் கட்டுவதற்கு ரூ.1.00 இலட்சம் கடன் வழங்க உள்ளார்கள்.

மருத்துவ காப்பீட்டு அட்டை பெற சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாம்களில் கலந்து கொண்டு மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்றுக்கொள்ளலாம், என மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ் அவர்கள் பேசினார்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.பி.சிவராம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி சுவேதா ராணி கணேசன், கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் திரு.பா.செல்லத்துரை, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் திருமதி முத்துமாரி, கொடைக்கானல் நகர்மன்ற துணைத்தலைவர் திரு.கே.பி.என்.மாயக்கண்ணன், கொடைக்கானல் வட்டாட்சியர் திரு.கார்த்திகேயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.