மூடு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், 310 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.26.81 கோடி மதிப்பிலான கடனுதவி மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 506 பயனாளிகளுக்கு ரூ.25.30 கோடி மதிப்பீட்டிலான அடையாள அட்டைகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 29/10/2024
.

செ.வெ.எண்:-70/2024

நாள்:29.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், 310 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.26.81 கோடி மதிப்பிலான கடனுதவி மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 506 பயனாளிகளுக்கு ரூ.25.30 கோடி மதிப்பீட்டிலான அடையாள அட்டைகளை வழங்கினார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காமாட்சி திருமண மண்டபத்தில் இன்று(29.10.2024) நடைபெற்ற விழாவில், 310 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.26.81 கோடி மதிப்பிலான கடன் உதவி மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 506 பயனாளிகளுக்கு ரூ.25.30 கோடி மதிப்பீட்டிலான அடையாள அட்டைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு மட்டுமின்றி, சொல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து, அத்திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.

பெண்கள் வாழ்க்கையில் சுயமாக முன்னேற வேண்டும், பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர வெண்டும என்பதற்காக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவை 1989-ஆம் ஆண்டு தருமபுரியில் தொடங்கினார். தொடர்ந்து 2006-2011-ஆம் ஆண்டில் சுயஉதவிக்குழுவினருக்கு கடன், சுழல்நிதி, மானியக் கடன் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரின் எண்ணங்களை நிறைவேற்றி, பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 9,640 குழுக்களும், நகர்ப்புற பகுதிகளில் 3,964 குழுக்களும் ஆக மொத்தம் 13,604 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இன்றைய தினம், ஊரகப்பகுதியில் 282 குழுவிற்கு ரூ.25.08 கோடி மதிப்பீட்டிலும், நகர்ப்புற பகுதியில் 28 குழுவிற்கு ரூ.1.73 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 310 சுய உதவி குழுவிற்கு ரூ.26.81 கோடி மதிப்பீட்டிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 15 பயனாளிகளுக்கு ரூ.12.42 இலட்சம் மதிப்பீட்டிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த கடனுதவிகள் வழங்கப்பட்டதன் மூலம் 4340 உறுப்பினர்கள் பயனடைகின்றனர்.

தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் வழங்கும் வகையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8.00 இலட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளது. அதில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் ஏற்கனவே தொகுப்பு வீடுகள் திட்டத்தில் கட்டப்பட்ட பழைய வீடுகளை பழுது பார்த்து வழங்குவதற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வீடும் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளன. மேலும், ஒரு பயனாளி வீடு கட்டுவது என்பது அவரது எதிர்காலத்திற்காக வாழ்நாளில் ஒருமுறை மேற்கொள்ளும் பணியாகும். இப்பயனாளிக்கு தகுதியிருப்பின் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.50,000 அல்லது கூட்டுறவு வங்கிகளில் குறைவான வட்டியில் ரூ.1.00 இலட்சம் வரை கடன் வழங்கப்படும். மேலும், வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் சொந்த வீடு கனவு, “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டம் மூலம் சாத்தியமாகியுள்ளது. “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 7,000 வீடுகள் கட்டப்படவுள்ளன.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1.16 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், அரசு நகரப் பேருந்துகளில் மகளில் இலவச பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பெண்களின் பயணச்செலவு குறைக்கப்பட்டு, சேமிப்பு ஏற்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 20.70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளதுடன், மாணவ, மாணவிகள் பசியின்றி கல்வி பயில வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழகத்தில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

பெண்கள் வாழ்க்கையில் உயர வேண்டும், முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான கடனுதவி ரூ.12.00 இலட்சத்திலிருந்து உயர்த்தப்பட்டு தொழில் வகைக்கேற்ப ரூ.30.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒட்டன்சத்திரம் பகுதி மக்களுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும்போது, ஊரகப் பகுதிகளில் தினமும் ஒரு நபருக்கு 55 லிட்டர், நகரப்பகுதிகளில் ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் என்ற வகையில் வழங்கப்படும்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆண்டுக்கு ரூ.5.00 இலட்சம் வரை கட்டணம் இன்றி சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். மேலும், இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் மொத்தம் 2053 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகளும், 52 வகையான நோய் பரிசோதனைகள் மற்றும் அதனோடு தொடர்புடைய தொடர் சிகிச்சைகளும், 8 உயர் அறுவை சிகிச்சைகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், 12 அரசு மருத்துவமனைகளும், 32 தனியார் மருத்துவமனைகளும் மற்றும் 3 பரிசோதனை மையம் 3 ஆட்டிசம் மையங்கள் இத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 86,731 நபருக்கு ரூ.150.33 கோடி மதிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுநாள் வரையில் 4,86,222 குடும்ப அட்டைதாருக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இதில் சிறப்பு முகாம் ஒட்டன்சத்திரத்தில் நடத்தப்பட்டு, 2,852 பயனாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிசிக்சை பெற தகுதி பெறுகின்றனர். இதில் 506 நபர்களுக்கு முதல் கட்டமாக காப்பீட்டுஅட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.25.30 கோடி ஆகும்.

அதேபோல், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான சிகிச்சைக்கு ஆகும் செலவை அரசே ஏற்கும் வகையில் இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.2.00 வரையிலான மருத்துவ செலவை அரசே ஏற்கும்.

பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் ஆதரவாக, உறுதுணையாக இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சதீஸ்பாபு, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திருமதி சுபாஷினி, ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் திரு.திருமலைச்சாமி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி மு.அய்யம்மாள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன், ஒட்டன்சத்திரம் நகராட்சி துணைத்தலைவர் திரு.ப.வெள்ளைச்சாமி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.